Published : 28 Apr 2020 10:56 am

Updated : 28 Apr 2020 10:56 am

 

Published : 28 Apr 2020 10:56 AM
Last Updated : 28 Apr 2020 10:56 AM

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா? - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு துரைமுருகன் கேள்வி

duraimurugan-asks-tn-government-regarding-rapid-test-kit
துரைமுருகன் - அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

சென்னை

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா என, திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, துரைமுருகன் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கையில், "ஊரே சிரிப்பாகச் சிரிக்கும் நேரத்தில், ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல நடந்துகொள்வதற்கு, அதிமுக ஆட்சியாளர்களைப் போல, பதவிக்காகச் சுயமரியாதை உள்ளிட்ட அனைத்தையும் அடமானம் வைத்தவர்களால்தான் முடியும்.

கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளை உற்பத்தி செய்த சீனாவில், அதன் விலை ரூ.225 என்றும், சரக்குக் கட்டணம் ரூ.20 என்றும், மொத்தம் ரூ.245 என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது, மத்திய அரசா, திமுகவா?

"இறக்குமதி செய்யப்பட்ட விலையிலிருந்து 145% அதிக விலை வைத்து வாங்கப்படும் இந்த கிட், இனி இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி உள்பட 400 ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்படவேண்டும்" என உத்தரவிட்டிருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம். இதைத்தான், திமுக தலைவர், தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் அது, அதிமுக அரசுக்கோ, திருடப் போன நேரத்தில் தேள் கொட்டியதுபோல இருக்கிறது. அதனால், திமுக தலைவருக்குப் பதில் சொல்வதாக நினைத்து, ஐசிஎம்ஆர் விலையில்தான் வாங்கினோம், ஆந்திராவைவிட கேரளாவைவிடத் தமிழ்நாட்டில் விலை குறைவு. வாங்கிய கருவிகளைத் திருப்பி அனுப்பிவிடுவோம், கொள்முதல் ஆர்டர் ரத்து செய்யப்படும் என்கிறார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை சம்பந்தமான அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவதும், முதல்வரைக் கேள்வி கேட்டால், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மறுப்புத் தெரிவிப்பதுமாக, அங்கே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது!

திமுக தலைவர் கேட்பவை, எளிமையான கேள்விகள் "கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து அதிமுக அரசிடம் வெளிப்படைத்தன்மை இருந்ததா? உரிய ஆலோசனைகளைக் கேட்டு நடந்தீர்களா?" என்ற கேள்விகளுக்கு இதுவரை பதிலே இல்லை.

"இரவு 8 மணிக்குக் கிட் வரும்" என்று முதல்வர் ஊடகங்களிடம் நேரடியாக அறிவித்தாரே, எத்தனை 8 மணி கடந்து கிட் வந்தது என்பதை மறைக்காமல் சொல்ல முடியுமா? ஆர்டர் செய்தது எவ்வளவு, கிடைத்தது எவ்வளவு என்பதையும், காலதாமதமானதற்குக் காரணம் என்ன என்பதையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா?

ரேபிட் டெஸ்ட் கருவிகள் விலை விவகாரத்தில் கேரளாவைக் கூட்டாளியாக்கப் பார்க்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அதே கேரளாவில், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பதையும், அதனை ஏற்று, எதிர்க்கட்சிகளைக் கலந்தாலோசித்து கேரள முதல்வர் செயல்படும் பக்குவத்தையும் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறாரா?

இந்தியாவில் வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் கரோனாவிலிருந்து மீண்டவர்கள் தமிழகத்தில் அதிகம் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் 'குட்கா' புகழ் விஜயபாஸ்கர், கேரளாவும் ஒடிசாவும் இன்னும் சில மாநிலங்களும், கரோனா தொற்றுப் பரவலின் எண்ணிக்கையைக் குறைத்த அளவுக்கு, மூன்று நாளில் கரோனா ஒழிந்துவிடும் என ஆரூடம் சொன்ன எடப்பாடி பழனிசாமி அரசு குறைத்திருக்கிறதா என்பதை அமைச்சர் விளக்குவாரா?

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அர்ப்பணிப்புடன் பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு இதுநாள்வரை பாதுகாப்பு உடைகள் முறையாக வழங்கப்பட்டிருக்கின்றதா? மருத்துவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உடைகள் இல்லாத நிலையில், பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்துவைத்து, அதில் பணியாற்றுவோருக்கு முழுமையான கவச உடைகள் வழங்கியிருப்பதற்கான அவசர அவசியத் தேவை என்ன?

ஊரடங்கு காலத்தில் உடனடியாக மனைகளை கட்டிடங்களை விற்கவும் வாங்கவும் ஆலாய்ப் பறப்பது யார்?

முதல்வரின் கீழ் உள்ள பொதுப்பணித்துறையில், புதிய டெண்டர்களுக்கு நிதிச்சுமையைக் காரணம் காட்டி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதல்வரின் கீழ் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் 700 கோடி ரூபாய்க்கு புதிய கட்டிடங்கள் கட்ட டெண்டர் கோரப்பட்டிருப்பது எதற்காக? யாருக்காக?

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்காக ஏற்கெனவே மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ரத்து செய்யப்படாத நிலையில், அதனைப் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து பட்டம் சூட்டிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அந்தப் பாதுகாப்பு மண்டலத்திலிருந்து மணல் அள்ளுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?

விவசாயிகள் விளைவித்த பயிர்களைக் கொள்முதல் செய்ய வக்கின்றி, அவை மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வீணாகும் சூழலில், யார் வீட்டுக்கோ வலியச் சென்று பால் பாக்கெட் வழங்கிய காமெடிக் கூத்துகள்தான் நிர்வாக லட்சணமா?

கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் என்பதன்றி வேறென்ன செய்திருக்கிறது இந்த அரசு?

மத்திய அரசிடமிருந்து தமிழகம் உரிமையுடன் பெற வேண்டிய நிதி குறித்து வாய் திறக்காமல், வலியுறுத்த முடியாமல், பேரிடர் காலத்திலும் பதவி மோகத்தில் விளம்பரம் தேடி அரசியல் செய்யும் அதிமுக ஆட்சியாளர்கள், திமுகவின் தலைவரை நோக்கி, மலிவான அரசியல் என்று பேசுவது, மல்லாந்து படுத்து எச்சில் துப்பிய கதையாகவே ஆகும்.

"மக்களின் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள்" என்பது மலிவான அரசியல் அல்ல; ஜனநாயக உரிமை.

ஒட்டுமொத்த உரிமைகளையும் அடகு வைத்து, சிக்கிய வழக்குகளில் தண்டனை பெறாமல் தப்பிப்பதற்காக, மேலும் மேலும் தவறுகளைச் செய்பவர்கள், நோய்த்தொற்று குறித்து சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் விழிப்புணர்வை உண்டாக்கிய எங்கள் தலைவர் செய்வது அரசியல் என்கிறார்கள். ஆமாம்... அவர் மக்களுக்கான அரசியலைச் செய்கிறார்.

மக்கள் நலன் காக்க திமுக என்ற பேரியக்கத்தை இந்தப் பேரிடர் காலத்தில் களமிறக்கியிருக்கிறார். மக்கள் போற்றும் அந்த மகத்தான செயல் உங்கள் பார்வையில் அரசியலாகத் தெரிகிறது!

நாளும் பொழுதும் ஊழல் செய்யும் உங்களைவிட, மக்கள் நலனுக்கான உரிமைப் போர் அரசியல் செய்யும் எங்கள் தலைவரின் பணி மகத்தானது" என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்அமைச்சர் விஜயபாஸ்கர்Corona virusMinister vijayabhaskarDuraimuruganDMKதுரைமுருகன்திமுகCORONA TN

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author