Published : 28 Apr 2020 10:24 AM
Last Updated : 28 Apr 2020 10:24 AM

20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை; ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை எனவும், ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய தொற்றுகள் குறைந்து வரும் நிலையில், இதே நிலையை தக்கவைத்துக் கொள்வது தான் தமிழகத்தின் முதன்மைக் கடமையாகும்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 52 புதிய நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து தமிழகத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஏற்பட்ட புதிய தொற்றுகளில் 47 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது கவலையளிக்கும் விஷயம் தான் என்றாலும் கூட, அவர்களைத் தவிர ஒட்டுமொத்த தமிழகத்திலும் 5 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிலும் கூட 4 பேர் மதுரையையும், ஒரு குழந்தை விழுப்புரத்தையும் சேர்ந்தவர்கள் எனும் நிலையில், மீதமுள்ள 35 மாவட்டங்களில் நேற்று புதிய தொற்று ஏற்படவில்லை என்பது உண்மையாகவே தமிழக மக்கள் அனைவருக்கும் நிம்மதியை அளித்திருக்கிறது.

கரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாகவே கட்டுக்குள் இருப்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரி கரோனாவின் பிடியிலிருந்து கிட்டத்தட்ட விடுவிக்கப்பட்டு விட்டது என்று கூறும் அளவுக்கு அந்த மாவட்டத்தில் கடந்த 19 நாட்களாக புதிய தொற்றுகள் ஏற்படவில்லை.

அதேபோல், வட எல்லையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும், தெற்கு எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 14 நாட்களாக புதிய நோய்த் தொற்றுகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் 13 நாட்களாகவும், கரூர், தேனி மாவட்டங்களில் 11 நாட்களாகவும், வேலூர் மாவட்டத்தில் 10 நாட்களாகவும் புதிய தொற்றுகள் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 8 நாட்களாகவும், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களாகவும், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 4 நாட்களாகவும் கரோனா வைரஸ் யாரையும் புதிதாக தாக்கவில்லை.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக யாரையும் கரோனா வைரஸ் தாக்கவில்லை. இவை தவிர கிருஷ்ணகிரி மாவட்டம் தொடக்கம் முதலே கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்கிறது. தமிழகத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படாத ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொருபுறம் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் குணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள 1,937 பேரில் இதுவரை 1,101 பேர், அதாவது 57 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 809 பேர் மருத்துவம் பெற்று வரும் நிலையில், அவர்களை விட அதிகமானவர்கள் குணமடைந்திருப்பது கரோனா நோய் பரவலைத் தடுப்பதில் நாம் வெற்றிக்கோட்டை நெருங்குகிறோம் என்பதைக் காட்டுகிறது.

தமிழக அரசின் வழிகாட்டுதல், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் கடுமையான உழைப்பு, காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்களின் உதவி, இவர்களுக்கெல்லாம் மேலாக பொதுமக்களின் ஒத்துழைப்பு ஆகியவை இல்லாமல் இத்தகைய முன்னேற்றத்தை எட்டியிருக்க முடியாது. ஊரடங்கு ஆணையை தமிழக மக்கள் மதித்து நடந்ததற்கு கிடைத்த பரிசு தான் இதுவாகும்.

கரோனா பரவல் தடுப்பில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம் என்றாலும் கூட, முழுமையான வெற்றியை அடைந்து விடவில்லை. அதற்கு இதே கட்டுப்பாட்டுடன் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். கடந்த சில வாரங்களில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை வைத்துப் பார்க்கும் போது, அடுத்த சில வாரங்களில் கரோனா அச்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்கி விட முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

அதற்காக நாம் செய்ய வேண்டியது ஊடரங்கு ஆணை மற்றும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை நாம் எவ்வளவு கடுமையாக கடைபிடித்து வந்தோமோ, அதை விட மும்மடங்கு கூடுதலாக கடைபிடிப்பதன் மூலம் கரோனாவை விரட்டியடிக்க முடியும்.

சென்னையைப் பொறுத்தவரை நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும் கூட, அதை எண்ணி அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தியாவின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது, அவற்றை விட மிக அதிகமாக சென்னையில் 10 லட்சம் பேருக்கு 3,100 சோதனைகள் என்ற அளவில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால் தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது.

அடுத்து வரும் நாட்களில் இன்னும் கூடுதலான சோதனைகளை மேற்கொண்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதன் மூலம் சென்னையிலும் கரோனா வைரஸை வீழ்த்தி விட முடியும். ஆகவே, கரோனாவை ஒழிப்பதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளித்தால் கரோனா ஒழிப்புப் போரில் வெற்றி விரைவில் சாத்தியமாகும்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x