

ஊரடங்கினால் பள்ளி மாணவர்களுக்கான சீருடைதைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கோபியில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறிய தாவது:
கோபி தொகுதி அதிமுக சார்பில், தொகுதியில் உள்ள 20 ஆயிரம் குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மூன்று நாட்களில் வழங்கி முடிக்கப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்று வருகின்றனர்.
வசதி படைத்தவர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யலாம். இதுகுறித்து அவர்கள் அந்தப்பகுதி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினரிடம் தெரிவித்து விட்டு, போதிய சமூக இடைவெளியை பின்பற்றி உதவியைச் செய்ய வேண்டும்.
வரும் கல்வியாண்டில் 50 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளி களாகவும், 50 பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 35 பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுகிறது. ஊரடங்கு முடிந்த பின்னர்தான் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க முடியும். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடபுத்தகங்கள், நோட்டுகள் தயார் நிலையில் உள்ளன. ஊரடங்கால், சீருடை தைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சீருடை 1 மாதம் காலதாமதமாக வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு மற்றும் சாக்ஸ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.