

ஐசிஎம்ஆரின் ஆணைப்படி 24 ஆயிரம் ரேபிட் கருவிகளும் திருப்பி அனுப்பப்படுவதால், அரசுக்கு எவ்வித செலவும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ரூ.600க்கு ரேபிட் பரிசோதனை கருவிகளை வாங்கியது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்
பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகமே போட்டி போட்டு ரேபிட் பரிசோதனை கருவிகளை அதிகளவில் வாங்க முயற்சித்த நேரத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ஐசிஎம்ஆர்) ரேபிட் பரிசோதனைக்கு அனுமதியளித்தது. அந்த கருவிகளை எங்கு, யாரிடம் வாங்கலாம் என்பதை ஐசிஎம்ஆர் முடிவெடுத்ததுடன், 7 நிறுவனங்களையும் தேர்வு செய்து, விற்பனைக்காக அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களையும் பட்டியலிட்டது.
இதில் உள்ள வோண்ட்போ நிறுவனம், இந்தியாவில் இப்பொருட்களை விற்க கேடில்லா பார்மா, மேட்ரிக்ஸ்லேப் ஆகிய இரு நிறுவனங்களை இறக்குமதி முகவர்களாக நியமித்தது. இந்த இரு நிறுவனங்களும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆர்க் பார்மசுட்டிகல், ஷான் பயோடெக், ரேர் மெட்டபாலிக்ஸ் உள்ளிட்ட பல விநியோக நிறுவனங்களுக்கு அனுமதியளித்தன. ஐசிஎம்ஆர் 5 லட்சம் கருவிகளை வாங்க ஆர்க் டீலர் நிறுவனத்துக்கு, கருவி ஒன்றுக்கு வரிகள் நீங்கலாக ரூ.600 என்ற விலையில் கொள்முதல் ஆணைகள் வழங்கியது.
இதன் அடிப்படையில், ஐசிஎம்ஆர் அனுமதித்த அதே வோண்ட்போ நிறுவன கருவிகளுக்கு, மத்தியஅரசின் அதேவிலையில் ஷான் பயோடெக் நிறுவனத்துக்கு தமிழக அரசும் கொள்முதல் ஆணைகளை வழங்கியது. ஐசிஎம்ஆரின் அனுமதிப்படி, கருவிகளை உற்பத்தி செய்யும் வோண்ட்போவின் பெயர் மட்டும் இருக்கும். இறக்குமதியாளர், விநியோகஸ்தர் பெயர் இருக்காது. இதை கூட புரிந்துகொள்ளாமல், ஷான் பயோடெக் நிறுவனத்தின் பெயர்ஐசிஎம்ஆரின் பட்டியலில் இல்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவருக்கு மறுப்பு
மத்திய அரசின் ஐசிஎம்ஆர் மற்றும் பிற மாநில அரசுகளும் விநியோக நிறுவனங்களிடம் மட்டுமே இந்த கருவிகளை கொள்முதல் செய்துள்ளன. இதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். ஐசிஎம்ஆர் ரேபிட் கருவிகளுக்கு ஒப்புதல் வழங்கியபோது, அதிக எண்ணிக்கையில் பரிசோதனை நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரின. போட்டிகள் காரணமாக இவற்றை வாங்குவதே கடினமாக இருந்த நிலையில், மக்களின் உயிர் காக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்துக்கு ஆணை வழங்கப்பட்டது.
தற்போது, ஐசிஎம்ஆர் ஆணைப்படி தமிழக அரசு பெற்றுள்ள 24 ஆயிரம் கருவிகளும் திருப்பியனுப்பப்படுகிறது. எனவே, இதில் தமிழக அரசுக்கு எந்த ஒரு செலவினமும் ஏற்படவில்லை. தவிர எஞ்சியுள்ள கொள்முதல் ஆணைகளும் ஐசிஎம்ஆர் ஆணைப்படி ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ரூ.600 கொடுத்தது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுள்ளது பொய்ப் பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படும். அரசின் உத்வேகத்தை ஒருநாளும் குறைக்காது. அரசின்மீது தொடர்ந்து உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி அரசியல் லாபம் அடைய முயற்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.