

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ள 2 சோதனைச் சாவடிகளில் சாலையின் குறுக்கே எழுப்பப்பட்ட தடுப்புச் சுவர்கள் அகற்றப்பட்டன.
ஆந்திர மாநிலத்திலிருந்து காய்கறி, பழங்கள் ஏற்றிவரும் லாரிகள் அனைத்தும் வேலூர்மாவட்டத்தில் உள்ள சேர்க்காடு,பொன்னை, கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, சயனகுண்டா, பத்தலப்பல்லி ஆகிய 6 சோதனைச் சாவடிகள் வழியாகவே வந்து செல்கின்றன. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 6 சோதனைச் சாவடிகளில் சயனகுண்டா மற்றும் பொன்னை சோதனைச் சாவடிகளில் எந்த வாகனமும் வந்து செல்ல முடியாதபடிசாலையின் குறுக்கே தடுப்புச்சுவரை எழுப்ப மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
அதன்படி 2 சோதனைச்சாவடிகளிலும் 4.5 அடி உயரமுள்ளதடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நடவடிக்கையால் அனைத்து வாகனங்களும் சுமார் 80 கிமீ கூடுதல் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதாக புகார் கூறப்பட்டது.
இதனால் வேறு சில பிரச்சினைகளும் எழுந்ததால் சுவரைஇடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.இதையடுத்து, 2 சோதனைச் சாவடிகளில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர்களும் நேற்று மாலை இடித்து அகற்றப்பட்டன.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வாகன நடமாட்டத்தை கண்காணிக்க எழுப்பப்பட்ட தடுப்புச்சுவர் குறித்ததகவல் ஆந்திர மாநில வாகனஓட்டிகளிடம் போய்ச் சேரவில்லை.இரு மாநில அதிகாரிகள் இடையிலான தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் தடுப்புச்சுவர் அகற்றப்பட்டது’’ என்றனர்.