

அடையாள அட்டையைப் பயன்படுத்தி தூய்மைப் பணியாளர்கள் அரசின் நிவாரண உதவியைப் பெறலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல தரப்பினருக்கும் அரசின் சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடையாள அட்டையைப் பயன்படுத்தி, தூய்மைப் பணியாளர்கள் அரசின் நிவாரண உதவியைப் பெறலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஏப்.27) அவர் வெளியிட்ட அறிக்கையில், "தாட்கோவின் கீழ் செயல்படும் தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம் மூலமாக 2008-ம் ஆண்டு பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அந்த அடையாள அட்டை வைத்திருக்கும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்கள் அதன் கீழ் வழங்கப்படும் நிவாரண உதவியைப் பெற, ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தாட்கோ மேலாளரை செல்போன் வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ, அடையாள அட்டையைப் படம் பிடித்து அனுப்பி விவரத்தை தெரிவிக்கலாம் அல்லது குறுஞ்செய்தி அனுப்பவும் செய்யலாம்.
எனவே, தூய்மைப் பணியாளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.