ரேபிட் டெஸ்ட் கிட்: அதிக விலைக்கு வாங்கிய மத்திய, மாநில அரசுகள்; மர்ம முடிச்சுகளை மக்களுக்கு விளக்கிடுக; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
Updated on
1 min read

ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் உள்ள மர்ம முடிச்சுகளை மத்திய அரசும், தமிழக அரசும் மக்களுக்கு விளக்கிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஏப்.27) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தொற்றைப் பரிசோதிப்பதற்காக சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் வாங்கியதில் பல கோடி ரூபாயை சில இடைத்தரகர் நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ள விவரத்தினை டெல்லி உயர் நீதிமன்றம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த அளவுக்கு இடைத்தரகர் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் துணை போயிருப்பது ஏன் என்ற கேள்வி எழுவதோடு, அந்தக் கொள்ளையில் மத்திய, மாநில அரசுகளுக்குப் பங்கு உள்ளதா என்ற பொதுமக்களின் சந்தேகங்களுக்கு தமிழக அரசும், மத்திய அரசும் விளக்கிட வேண்டும்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள கரோனா வைரஸ் தொற்றினை சோதிப்பதற்காக சீனாவிலுள்ள வோன்போ பயோடெக் என்ற நிறுவனத்திடமிருந்து இந்தியாவில் செயல்படக்கூடிய மேட்ரிக்ஸ் லேப்ஸ் என்கிற நிறுவனம் மேற்கூறிய கருவி ஒன்றுக்கு ரூ.225 என்ற அடிப்படையில் இறக்குமதி செய்து, அதே கருவியை ரியல் மெட்டபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.400க்கு விற்று, இந்த இரு நிறுவனங்களும் மேற்கூறிய அதே கருவியை 600 ரூபாய்க்கு ஐசிஎம்ஆருக்கு விற்றுள்ளனர். அதாவது, 225 ரூபாய் விலையுள்ள ஒரு கருவியை 600 ரூபாய்க்கு ஐசிஎம்ஆர் வாங்கியுள்ளது.

இதேபோன்று, தமிழக அரசும் மேற்கண்ட நிறுவனங்களிடமிருந்து 50 ஆயிரம் கருவிகள் வாங்கியுள்ளது. ஐசிஎம்ஆரும் தமிழக அரசும் இவ்வாறு இடைத்தரகர்கள் நிறுவனங்கள் மூலம் வாங்காமல் நேரடியாக வோன்போ பயோடெக் நிறுவனத்திடமிருந்து வாங்கியிருந்தால் ஒரு சோதனைக் கருவியை ரூபாய் 225 விலைக்கு வாங்கியிருக்க முடியும். இதன் மூலம் ஒவ்வொரு கருவிக்கும் கூடுதல் விலை ரூபாய் 375-ஐ த் தவிர்த்திருக்க முடியும்.

மத்திய அரசு நிறுவனமான ஐசிஎம்ஆரும் தமிழக அரசும் இவ்வாறு கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய, அதுவும் இடைத்தரகர்கள் நிறுவனங்கள் மூலம் வாங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? என்கிற கேள்வி எழுகிறது. இதில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

மேலும், உயிர்காக்கும் சோதனைக் கருவிகள் விற்பதிலும் கூட இடைத்தரகர்கள் நிறுவனங்கள் கொள்ளை லாபமடிப்பதை டெல்லி உயர் நீதிமன்றம் அழுத்தமாக சுட்டிக் காட்டியதுடன், எதிர்காலத்தில் இச்சோதனைக் கருவிகளை ஜிஎஸ்டி உள்பட ரூ.400க்கு விற்க வேண்டுமென கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் கரோனா தடுப்பு கருவிகள் மற்றும் உபகரணங்களை வாங்குவதில் மத்திய, மாநில அரசுகள் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டுமென வற்புறுத்துவதோடு, ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் உள்ள மர்ம முடிச்சுகளை மத்திய அரசும், தமிழக அரசும் மக்களுக்கு விளக்கிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in