

மதுரை மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
மதுரை ‘கரோனா’ வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட ரேஸ்கோர்ஸ் காலனி, செல்லூர் மணவாளன் நகர், ஆனையூர், எஸ்.வி.பி.நகர், சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள், ‘கரோனா’ தடுப்பு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களைப் போல், மாநகராட்சி முழுவதும் தங்கள் உயிரைப் பனையம் வைத்து தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள் இன்று வழங்கப்பட்டன.
மாநகராட்சியின் சுமார் 5000 பணியாளர்களுக்கு இன்று இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன. மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இம்மாத்திரைகள் வழங்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.