

விருத்தாசலம் அருகே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், ஆலடி சாலைப் பகுதியில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் காணப்பட்டவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, அவர்கள் வசித்தப் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபரும் 60 வயது நிறைந்த ஒருவரும் நேற்று (ஏப்.26) திடீரென உயிரிழந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிப்போர் அனைவரையும் பரிசோதனை நடத்த உத்தரவிட்ட விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், உயிரிழந்தவர்களின் உடலையும் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் உயிரிழந்தது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, "இறந்தவர்களில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு நோய் இருந்துள்ளது. மேலும் மற்றொருவர் மாரடைப்பால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. யாருக்கும் கரோனா தொற்று இல்லை" என தெரிவித்துள்ளார்.