

மதுரை மாநகராட்சியில் வரும் 29-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் நோய்வாய்ப்படும் கால்நடைகளுக்கு கால்நடை துறை மருத்துவர்கள் அவர்கள் வீட்டிற்கே சென்று நேரடியாக சிகிச்சை அளிக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் மக்கள் வாகனங்களில் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு அனுமதியில்லை. அத்தியாவசியப்பணிகளுக்கு செல்வோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனால், கால்நடை வளர்ப்போர், கால்நடைகள் நோய் வாய்ப்பட்டால் அதனை வாகனங்களில் ஏற்றி சென்று கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், கால்நடை பராமரிப்பு துறை இன்று முதல் கால்நடை வளர்ப்போர் வீடுகளுக்கே மருத்துவர்களை அனுப்பி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக கால்நடை மருத்துவர்கள் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகம், அவர்களுக்கு முககவசம், கையுறை போன்றவை வழங்கியுள்ளது.
மதுரை மாவட்ட கால்நடை பாராமரிப்பு துறை இணை இயக்குனர் சுரேஷ், கிறிஸ்டோபர், கால்நடை மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் கூறுகையில், ‘‘கால்நடைகளுக்கான அவசர சிகிச்சைகளுக்கு மருத்துவர்கள் வீடு தேடிசென்று சிகிச்சை வழங்க அவசர ஊர்திக்கு(ஆம்புலன்ஸ்) வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவோர் 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரவித்தால் கால்நடை மருத்துவர்கள் வீட்டிற்கே தேடி வந்து கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்பார்கள். ஆலோசனை வழங்குவார்கள். இந்த வாய்ப்பை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம், ’’ என்றார்.