

கரோனா தொற்று குறித்த தமிழக நிலை குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழகம் கரோனா பாதிப்பில் இந்திய அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது. தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வைத்துவரும் நிலையில் பிசிஆர் சோதனை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருநாளைக்கு 7,500 சோதனை என்கிற அளவுக்கு தமிழகம் உயர்ந்துள்ளது.
ஆனாலும் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,885 என்கிற அளவை அடைந்துள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக உள்ளன. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் 3 இலக்க எண்ணை அடைந்துவிட்டன. திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களும் பின்னாலேயே உள்ளன. இதில் சென்னை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.
சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவின் பல மாநிலங்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. சென்னையில் பல மண்டலங்களில் அதிக அளவில் நோய்த்தொற்று உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஆராய மத்திய குழு சென்னை வந்தது.
ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது. இந்தக் குழு சென்னையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தது. சென்னையில் பல்வேறு இடங்களுக்கு இக்குழு சென்றது. கோயம்பேடு மார்க்கெட், தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் உள்ள பகுதிகள், மருத்துவமனைகளில் குழு ஆய்வு செய்தது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள காப்பகங்களிலும் ஆய்வு நடத்தியது. சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினருடனும் ஆலோசனை நடத்தியது.
பின்னர் அந்தக்குழு இன்று முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், பேரிடர் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரோனா பாதிப்பு நேரடிக் கள ஆய்வில் திரட்டப்பட்ட தகவல் அடிப்படையில் முதல்வருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்துக்கு முன் முதல்வர் பழனிசாமி பிரதமர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மேற்கண்ட கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையுடன் மத்திய அரசிடமிருந்து தமிழகத்தின் கோரிக்கைகள், நிதித் தேவை என்ன என்பது குறித்தும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் உதவி குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.