பென்ஷன் பணத்தில் கரோனா பணி: நெகிழவைக்கும் முன்னாள் சுகாதாரப் பணியாளர்

பென்ஷன் பணத்தில் கரோனா பணி: நெகிழவைக்கும் முன்னாள் சுகாதாரப் பணியாளர்
Updated on
1 min read

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள கணபதி நகர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அங்குள்ள ஒரு வீட்டுவாசலில், ‘ஏழைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதும் உதவி தேவைப்பட்டால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்' என்று தனது அலைபேசி எண்ணைப் போட்டு எழுதி ஒட்டியிருந்தார் ராமசாமி பிள்ளை என்பவர்.

அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன். வாசலுக்கு வந்து கதவைத் திறந்தார் ராமசாமி. அந்த வீட்டின் ஒருபகுதியில், உதவுவதற்காக மளிகைப் பொருள்கள், அரிசி உள்ளிட்டவை குவிந்திருந்தன. ஏற்கெனவே ராமசாமியை ஆங்காங்கே சாலைகளில் பார்த்திருக்கிறேன். பொதுமக்களுக்கு சானிடைசர் மூலம் கைகழுவக் கற்றுக் கொடுப்பது, ஏழைகளுக்கு இலவசமாக சானிடைசர் வழங்குவது, தனிமனித இடைவெளி குறித்த பரப்புரையில் ஈடுபடுவது உள்ளிட்ட அவரது சேவைகளைக் கவனித்திருக்கிறேன். அதைப்பற்றியும் அவரிடம் பேசினேன்.

தனது கரோனா கால சேவைகள் பற்றி பேசத் தொடங்கினார் ராமசாமி. “பொது சுகாதாரத் துறையில் ஆபரேஷன் தியேட்டரில் வேலை செஞ்சு ரிட்டயர்டு ஆனவன் நான். என்னோட மனைவி மீனாட்சியும் சுகாதாரத் துறையில் வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனவங்கதான். இரண்டு வருசத்துக்கு முன்னாடி மனைவி இறந்துட்டாங்க. என்னோட ஒரே பொண்ணு உமா மகேஸ்வரி கல்யாணம் முடிஞ்சு வெளியூரில் இருக்காங்க. இப்போ இந்த வீட்டில் நான் மட்டும் தனியா இருக்கேன்.‘மனித பாதுகாப்புக் கழகம்’ என்னும் அமைப்புல மாவட்டச் செயலாளரா இருக்கேன்.

எனக்கு பென்ஷன் வருது. இப்போ பேரிடர் காலம். நான் வேலை பார்த்த துறையும் முழு மூச்சா இறங்கி நின்னு வேலைசெய்யுது. எனக்கும் அந்தத் துறையில் வேலை செய்த அனுபவங்கள் இருக்கு. இந்த இக்கட்டான நேரத்தில் நாமும் களத்தில் நிக்கணும்னு தோணுச்சு. பென்ஷன் பணத்துல என் செலவுக்குப் போக மீதி அக்கவுண்டில் இருந்துச்சு. இந்தப் பேரிடர் காலத்தில் அது பலருக்கும் பயன்படணும்னு முடிவுபண்ணி செயல்படுத்திட்டு இருக்கேன்.

மாஸ்க் மட்டும் இரண்டாயிரம் பேருக்கு வாங்கிக் கொடுத்தேன். இதுபோக 5 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய கிட் 300 குடும்பங்களுக்கும் மேல கொடுத்திருக்கேன். தினமும் முந்நூறு பேருக்கு சாப்பாடு கொடுக்குறேன். இதுபோக நண்பர்களோட சேர்ந்து கபசுரக் குடிநீரும் விநியோகிச்சுட்டு இருக்கேன்.

இந்த வாழ்க்கை எல்லாமே அரசாங்கம் தந்தது. செஞ்ச வேலைக்குத் திருப்தியான சம்பளம் கொடுத்தாங்க. ஓய்வுக்குப் பின்னாடி பென்ஷன் கொடுக்குறாங்க. என்னோட தேவைக்குப் போக அதில் மிச்சம் இருக்கத்தான் செய்யுது. அதை நானே வங்கிக்கணக்கில் சேர்த்து வைச்சுக்குறதைவிட இந்த இக்கட்டான நேரத்தில் நாலுபேருக்கு கொடுத்து உதவும்போது எவ்வளவு ஏந்தலா இருக்கும்?

அதேமாதிரி சுகாதாரப் பணி அனுபவத்தோட இதை அணுகும்போது சேவை ஒருபக்கமும், விழிப்புணர்வு மறுபக்கமுமா நகருது. ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் பத்தி தகவல் தெரிஞ்சா நானே நேரடியாக அவர்களது வீடுகளுக்குப் போய் உதவறேன்” என்று சொல்லும் ராமசாமி, அனைவரையும் நெகிழ வைக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in