

விழுப்புரத்தில் திருமணம் முடிந்து, அரியலூருக்குச் செல்ல முடியாமல் மணக்கோலத்தில் தம்பதியர் தவித்தனர்.
நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும் மே 3-ம் தேதி வரை இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும். அதுவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இறப்பு, திருமணம் போன்றவற்றுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதி பெற்று வெளியே செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்து, அனுமதி கிடைத்த பிறகு செல்ல முடியும். ஆனால், இறப்பு போன்ற அவசரச் சம்பவத்திற்குச் செல்ல இந்த அனுமதிக் கடிதம் கிடைப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (35). இவருக்கும், அரியலூர், புதுமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த காவ்யா (27) என்பவருக்கும், திருமணம் நிச்சியக்கப்பட்டு இன்று (ஏப்.27) காலை கண்டாச்சிபுரம் சிவன் கோயிலில் எளிமையாகத் திருமணம் நடந்து முடிந்தது. இருதரப்பு வீட்டிலும் 10 பேர் மட்டுமே பங்கேற்று திருமணத்தை முடித்தனர்.
இதையடுத்து, திருமணம் முடிந்து, பெண் வீட்டுக்குச் செல்வதற்காக மணக்கோலத்தில் தம்பதியர் தயாராகினர்.
ஆனால், பெண் வீட்டுக்குச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக் கடிதம் கிடைக்காததால் திருமணமான மணக்கோலத்திலேயே ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
இதுகுறித்து பெண் வீட்டார் கூறுகையில், "திருமணத்திற்கு வரும்போது அரியலூர் மாவட்டநிர்வாகத்தின் அனுமதிக் கடிதத்தோடு காரில் வந்துவிட்டோம். திருமணம் முடிந்து, சம்பிரதாயச் சடங்கிற்கு பெண் வீட்டுக்குச் செல்ல வேண்டும். இதற்காக, இந்த மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக் கடிதம் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தோம். ஆனால், அனுமதிக் கடிதம் கிடைக்கவில்லை. இரவுக்குள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்" என்று கூறினர்.
காலையில் திருமணம் முடிந்து வந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் பிற்பகல் வரை தவித்துக் கொண்டிருந்தனர்.
பின்னர், அங்கிருந்த பத்திரிகையாளர்கள், ''அரியலூர் மாவட்ட அனுமதிக் கடிதத்தையே அனுமதி அளிக்கும் காவல்துறையினரிடம் காட்டுங்கள். மணக்கோலத்தில் இருப்பதால் அனுமதி மறுக்க மாட்டார்கள்" என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.