Published : 27 Apr 2020 15:02 pm

Updated : 27 Apr 2020 15:02 pm

 

Published : 27 Apr 2020 03:02 PM
Last Updated : 27 Apr 2020 03:02 PM

ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை; வெளிச்சத்துக்கு கொண்டுவந்த டெல்லி உயர் நீதிமன்றம்; அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: டிடிவி தினகரன்

robbery-for-rapid-test-equipment-delhi-supreme-court-government-should-release-white-report-ddv-dinakaran

கரோனா ஊரடங்கு நேரத்தில் 20 முறைக்கும் மேலாக அதிகாரிகளை, அமைச்சர்களை அழைத்துக் கூட்டம் நடத்தினேன் என்று கூறும் முதல்வர் பழனிசாமி, ஒரு முறையாவது சுகாதார அமைச்சரை அழைத்து என்ன நடக்கிறது என்று கேட்டாரா? அப்படிக் கேட்டிருந்தால், வரி இல்லாமல் ரூ.245 க்கு வாங்கிய கருவிக்கு 355 ரூபாய் கூடுதல் லாபம் வைத்து விற்க முன்வந்த தனியார் கம்பெனி எப்படி அனுமதிக்கப்பட்டது என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“ குடிமராமத்துக்கு நிதி ஒதுக்குவது தொடங்கி கரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவது வரை பணம் சம்பாதிப்பது மட்டுமே பழனிசாமி அரசின் குறிக்கோள்; மக்கள் நலன் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை என்ற குற்றச்சாட்டுகள் பல நேரங்களில் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் டெல்லி உயர் நீதிமன்றம் ஏப்ரல் 24-ம் தேதி வழங்கியிருக்கும் ஒரு தீர்ப்பு அமைந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றைக் கண்டறியும் பிசிஆர் (PCR) கருவிகள் போதுமான அளவுக்குத் தமிழக அரசிடம் கையிருப்பு இல்லை; அதை வாங்கும் முயற்சியிலும் அவர்கள் தீவிரம் காட்டவில்லை என்ற சூழ்நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட் (RAPID TEST KIT) என்னும் கூடுதல் முறையிலாவது சோதனை செய்ய முயற்சி செய்வார்களா என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

இதையடுத்து, 50,000 ரேபிட் டெஸ்ட் (RAPID TEST KIT) கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்து, அதில் 24,000 கருவிகள் வந்துவிட்டன. மேலும் நான்கு லட்சம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறோம் என்று தமிழக அரசின் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், ஏப்ரல் 18 அன்று சத்தீஷ்கர் மாநில அரசு இந்த ரேபிட் டெஸ்ட் (RAPID TEST KIT) கருவியை ரூ.337 க்கு (ஜி.எஸ்.டி. வரி தனி) வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக அதே நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், நமது தமிழக அரசு எவ்வளவு ரூபாய் கொடுத்து இந்தக் கருவிகளை வாங்கியது என்று கேட்டபோது கடைசி வரை பதிலே சொல்லவில்லை.

சுமார் ஒரு மணிநேரம் கழித்து சில ஆவணங்களை வெளியிட்டு ஒரு கருவியின் விலை ரூ.600 மற்றும் ஜி.எஸ்.டி. 12% அதாவது ரூ 72 என ஒரு கருவியை ரூ.672 க்கு வாங்கியிருப்பதாகச் சொன்னது அரசு. இதையடுத்து கரோனா சிகிச்சை தொடர்பாக தமிழக அரசு இதுவரை கொள்முதல் செய்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பான விவரங்கள், அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடும்படி அடுத்த நாளே நான் அறிக்கை வெளியிட்டேன்.

ஆனால், அரசு அதற்கு பதில் அளிக்காமல் மௌனம் சாதித்தது. அந்த மௌனத்தின் பின்னணியைத்தான் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பு இப்போது வெளியே கொண்டுவந்திருக்கிறது. ICMR என்று சொல்லப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்தான் இதுபோன்ற மருத்துவ சோதனைக் கருவிகளை ஆய்வு செய்து, அதில் எவற்றை வாங்கலாம், என்ன விலைக்கு வாங்கலாம் என்று முடிவு செய்து அதை மாநில அரசுகளுக்கு அறிவுரையாகச் சொல்கிறது.

சீனாவின் WONDFO என்ற தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இக்கருவிகளை ரூ 245 என்ற விலையில் டெல்லியைச் சேர்ந்த MATRIX LABS என்ற நிறுவனம்தான் இறக்குமதி செய்கிறது. இவர்களிடம் வாங்கிதான் RARE METABOLICS நிறுவனம் இந்தியா முழுக்க சப்ளை செய்கிறது.

இந்த சூழலில், RARE METABOLICS மற்றும் MATRIC LABS ஆகிய நிறுவனங்களுக்கு இடையே சப்ளை தொடர்பாக மோதல் எழுந்ததை அடுத்து இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வந்தது.

இவ்வழக்கு விசாரணையின்போது, இந்த விலை விவரங்களைக் கேட்டறிந்த நீதிபதி, ஒட்டுமொத்த நாடும் கரோனா பாதிப்பால் அச்சத்தாலும், பீதியாலும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோதனைகளைக் குறைந்த விலையில் செய்ய வேண்டியது அவசியம்.

245 ரூபாய்க்கு வாங்கிய ஒரு கருவியை 600 ரூபாய்க்கு விற்பனை செய்வது ஏற்புடையதல்ல. மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிக்க முடியாது என்று சொல்லி ஒரு கருவியின் விலையை வரிகள் உட்பட 400 ரூபாய் என்று நிர்ணயம் செய்து மக்களின் மீது அக்கறையும் மனிதாபிமானமும் கொண்டு உத்தரவிட்டார். இதை அந்த இரு நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டன.

இந்த வழக்கு விசாரணையின்போது, ‘MATRIC LABS' நிறுவனத்திடம் இக்கருவிகளை வாங்கி இந்தியாவில் விநியோகிக்கும் உரிமை எங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு, SHAN BIOTECH என்ற டீலர் மூலமாக MATRIC LABS நிறுவனத்தை நேரடியாக அணுகி ரூ 600 என்ற விலைக்கு 50,000 கருவிகளை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இது விதிமீறல்’ என்ற ஒரு விஷயத்தைப் போட்டு உடைத்தது RARE METABOLICS நிறுவனம்.

இப்போது நாம் பழனிசாமி அரசைப் பார்த்து கேட்க நினைக்கும் கேள்விகள் இவைதான்...

1. ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போதும் நாம் இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்க சீனாவில் ஆர்டர் செய்திருக்கிறோம். கப்பல் புறப்பட்டுவிட்டது. விமானம் புறப்பட்டுவிட்டது. விரைவில் வரும் என்று பல நேரங்களில் முதல்வர் பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் சொன்னார்களே அது பொய்தானே?

2. அப்படியே டீலர் மூலமாக வாங்கவேண்டி வந்தாலும் விதிகளை மீறி, முகம் தெரியாத SHAN BIOTECH என்ற டீலரை அணுகியது யார்? அவர்களை அரசுக்கு அறிமுகம் செய்தது யார்?

3. ஒரு நாளைக்கு 20 மணிநேரம் உழைப்பதாகச் சொல்லும் முதல்வரும் சுகாதார அமைச்சரும் அந்த சீன தயாரிப்பு நிறுவனத்தை அணுகி ஒரு கருவியின் அடக்க விலை எவ்வளவு என்று கேட்கும் அடிப்படை விஷயத்தைச் செய்தார்களா?

4. அப்படிக் கேட்டிருந்தால், வரிகள் இல்லாமல் ரூ.245 க்கு வாங்கிய கருவிக்கு 355 ரூபாய் கூடுதல் லாபம் வைத்து விற்க முன்வந்த SHAN BIOTECH நிறுவனத்தை மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அனுமதித்தது ஏன்?

5. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இருக்கும் மனிதநேயத்திலும், மக்களைப் பற்றிய அக்கறையிலும் ஒரு சிறு துளியாவது பழனிசாமி அரசுக்கு இருந்திருந்தால் SHAN BIOTECH நிறுவனத்திடம் ரேபிட் டெஸ்ட் கருவியின் விலையைக் குறைக்கச் சொல்லி பேச்சு நடத்தியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?

6. ஒரு கருவிக்கு கூடுதலாக 355 ரூபாய் விலை வைத்து ஒரு பகல் கொள்ளையே நடந்திருக்கிறது. இதில் குறைந்தபட்ச லாபத் தொகை போக மீதிப்பணத்தில் யாருக்கெல்லாம் மறைமுகமாக பங்கு போனது?

7. கரோனா ஊரடங்கு நேரத்தில் 20 முறைக்கும் மேலாக அதிகாரிகளை, அமைச்சர்களை அழைத்துக் கூட்டம் நடத்தினேன் என்று தம்பட்டம் அடிக்கும் முதல்வர் பழனிசாமி, ஒரு முறையாவது சுகாதார அமைச்சரை அழைத்து என்ன நடக்கிறது என்று கேட்டாரா? அப்படிக் கேட்டிருந்தால், எல்லாம் தெரிந்திருந்தும் அதை அனுமதித்தது ஏன்?

8. இப்போது ரேபிட் டெஸ்ட் கருவியின் பயன்பாடே நிறுத்தப்பட்ட நிலையில், 50,000 கருவிகளுக்காக கொள்ளையடிப்பதற்கும் சேர்த்து கொடுக்கப்பட்ட ரூ.3.36 கோடியின் நிலை என்ன?

9. மேலும் நான்கு லட்சம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகச் சொன்னீர்களே. அதுவும் இந்தக் கொள்ளை விலை அடிப்படையில்தானா?

10. அப்படி அதே விலைக்குதான் என்றால், நீதிமன்றம் குறிப்பிட்ட 400 ரூபாய் என்ற விலையைத் தாண்டி, 4 லட்சம் கருவிகளுக்கு சுமார் 8 கோடி ரூபாய் கொள்ளை நடக்க இருக்கிறதே அதற்கு என்ன பதில்?

கரோனா ஊரடங்கின் காரணமாக ஒட்டுமொத்த தமிழகமும் விழிபிதுங்கி, அடிப்படை உணவுக்குக் கூட வழியின்றி தவித்துவரும் நேரத்தில், இப்படி ஒரு செயலை நடத்தத் துணிந்த பழனிசாமி அரசை நோக்கி இன்னும் ஏராளமான கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.

இவற்றுக்குப் பதிலளிக்கும் விதமாக, இப்போதாவது தனது மௌனத்தை இந்த அரசு கைவிட்டு, என்ன நடந்தது என்பது பற்றி முழுமையான ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேன்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், இதுவரை நடந்த மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட அனைத்துக் கொள்முதல் விஷயங்களையும் பற்றி ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்”.

இவ்வாறு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

High rateRapid Test equipmentDelhi high CourtGovernmentCorona tnReleaseWhite reportTTV Dinakaranரேபிட் டெஸ்ட் கருவிகொள்ளை விலைவெளிச்சத்துக்கு வந்ததுடெல்லி உயர்நீதிமன்றம்அரசுவெள்ளை அறிக்கைடிடிவி தினகரன்கரோனாகொரோனா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author