Published : 27 Apr 2020 01:51 PM
Last Updated : 27 Apr 2020 01:51 PM

முழு ஊரடங்கு நேரத்திலும் அடங்காத சென்னை வாகன ஓட்டிகள்: முதல் நாளில் 1,199 வழக்குகள் பதிவு, 1,244 வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படாததால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு 4 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் எதற்கும் அஞ்சாத மக்கள் வெளியில் சுற்றிச் சிக்கியுள்ளனர். முழு ஊரடங்கின் முதல் நாளில் 1,199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா தொற்று தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிகமாகக் காணப்படுகிறது. சென்னைக்கு அடுத்து கோவை, திருப்பூர் என நீள்கிறது. சென்னையின் மொத்த எண்ணிக்கை மேற்கு வங்க மாநிலத்தின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. மத்திய அரசின் ஹாட் ஸ்பாட் மாவட்டங்கள் அதிகம் இருப்பதும் தமிழகத்தில்தான்.

இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில் தமிழகம் உள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முழு ஊரடங்கை நேற்று காலை முதல் புதன் இரவு வரை தமிழக அரசு அறிவித்தது. அனைத்துக்கும் தடை, மருத்துவம், அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து யாரும் வெளியில் வந்தால் வாகனம் பறிமுதல், வழக்கு என முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மளிகை, காய்கறிக் கடைகள் கூட திறக்காத நிலையில், அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி அதிக அளவில் வாகன ஓட்டிகள் சென்னையில் திரிந்து போலீஸாரிடம் சிக்கினர். இந்தக் காலகட்டத்தில் வெளியில் சுற்றுபவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. நேற்றும் வெளியில் சுற்றித் திரிந்த நபர்களால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை செய்திக்குறிப்பு:

பிரிவு 144 சிஆர்பிசி சட்டத்தை நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (26/4) காலை 6 மணி முதல் இன்று (27/4) காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 1,199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 816 இருசக்கர வாகனங்கள், 39 ஆட்டோக்கள் மற்றும் 49 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 904 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 324 இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள் மற்றும் 7 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 340 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்”.

இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x