

கிண்டி வட்டாட்சியர் ஜீப் ராஜகீழ்ப்பாக்கம் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். ஓடும் ஜீப்பில் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கரோனா நோய்த் தடுப்புப் பணியில் அனைத்து வருவாய்த்துறையினரும் பணியில் உள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தில் மேலாளர் பொறுப்பில் இருக்கும் வட்டாட்சியர் ராம்குமார், கிண்டி வட்டாட்சியர் வாகனத்தில் பணி நிமித்தமாகச் சென்றுள்ளார்.
வாகனத்தை அசோக் நகரைச் சேர்ந்த ஓட்டுநர் சந்தீப் (40) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இன்று காலை 9.30 மணி அளவில் சேலையூர் அம்பிகா நகரில் இருந்து மாடம்பாக்கம் பிரதான சாலை வழியாக ராஜ கீழ்ப்பாக்கம் செல்லும் சாலையில் ஜீப் சென்றுள்ளது.
அங்குள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வாகனம் சென்றபோது ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மயங்கிய அவர் வாகனத்தை சாலையோரம் வலதுபுறம் இருந்த டிரான்ஸ்பர் மீது மோதினார்.
இதில் அவருக்கு மார்பு, முகத்தில் காயம் ஏற்பட்டது. அருகில் அமர்ந்திருந்த வட்டாட்சியர் ராம்குமார் காயமின்றி தப்பினார். உடனடியாக காயம்பட்ட ஓட்டுநர் சந்தீப் ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஓட்டுநர் சந்தீப் இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டது. விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டுநர் சந்தீப் தீவிர மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மாரடைப்பு நேரத்திலும் ஓட்டுநர் சந்தீப் சாலையோரம் மோதியதில் பெரிய அளவில் விபத்து நிகழாமல் தவிர்க்கப்பட்டது.