10 ரூபாய்க்கு மதிய உணவு; புதுச்சேரியில் உழவர்கரை நகராட்சி புது முயற்சி

10 ரூபாய்க்கு மதிய உணவு விநியோகம்.
10 ரூபாய்க்கு மதிய உணவு விநியோகம்.
Updated on
1 min read

10 ரூபாய்க்கு மதிய உணவு மற்றும் போன் செய்தால் காய்கறி, மளிகை தரும் முயற்சியை புதுச்சேரியிலுள்ள உழவர்கரை நகராட்சி தொடங்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்களில் ஏழைகள், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்கு உணவு கிடைப்பதில்தான் அதிகம் சிரமம் ஏற்படுகிறது.

இதையடுத்து புதுச்சேரியிலுள்ள உழவர்கரை நகராட்சி எடுத்துள்ள முயற்சி தொடர்பாக ஆணையர் கந்தசாமி கூறியதாவது:

"அத்தியாவசியப் பணிக்கு வருவோர், ஏழைகளுக்கு மதிய உணவைக் குறைந்த விலையில் தருகிறோம். 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி, தக்காளி சாதம், சாம்பார் சாதம், புளி தாசம், தயிர் சாதம் எனப் பல வகையான உணவுகளை புதுச்சேரி உழவர்கரை நகராட்சி மற்றும் நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் நகர வாழ்வாதார மையம் மூலம் தருகிறோம். மிகவும் தூய்மையாக தரத்துடன் செய்து தருகிறோம்.

இந்த மதிய உணவானது உழவர்கரை நகராட்சி (ஜவஹர் நகர்), கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள உழவர்கரை நகராட்சி நவீன மீன் அங்காடி, கம்பன் கலை அரங்கம் ஆகிய இடங்களில் தரப்படுகிறது.

ஏழை மக்கள், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் வெளிமாநிலத்தில் இருந்து பணிபுரிவோர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பலன் பெறுகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக அவசர கால அழைப்பு மையத்தை உருவாக்கி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தருகிறோம். அவசர சேவைகள் இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம். இதற்கான எண்கள் 7806801159/ 60/ 61/ 62. இதன் மூலம் காய்கறி பை, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றையும் தருகிறோம். வீட்டிலிருந்தே பொதுமக்கள் இதைப் பயன்படுத்தலாம்".

இவ்வாறு கந்தசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in