Published : 27 Apr 2020 12:44 pm

Updated : 27 Apr 2020 12:44 pm

 

Published : 27 Apr 2020 12:44 PM
Last Updated : 27 Apr 2020 12:44 PM

பிரபாகரன் என்ற பெயரை அதிகம் சூட்டியவர்கள் மலையாளிகளே; இதை விவாதிப்பது பயனற்ற செயல்: கொளத்தூர் மணி

kolathur-mani-press-release-about-dulquer-salman-movie

தமிழர்கள் பெரிதும் மதிக்கும் மலையாள நடிகர்களில் ஒருவரான மம்மூட்டியின் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியாகி தோல்வி கண்ட மலையாளப் படம் 'வரனே அவஷ்யமுண்டு’.

அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சி ஒன்றில் துல்கரின் செல்ல நாய்க்கு, ‘பிரபாகரன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. தற்போது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் அனைவரும் படங்களைப் பார்த்து வருவதால், இதைப் பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர், இந்தக் காட்சியைக் குறிப்பிட்டுக் கொதித்தெழுந்து பதிவிட அது தற்போது கரோனாவைப்போல் சமூக வலையில் பரவிக்கிடக்கிறது.

ஜோதிகாவை விட்டுவிட்டு துல்கர் சல்மானை அனைவரும் பிடித்துக்கொண்டுவிட்டார்கள். ‘விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மலையாளிகள் அவமானப்படுத்திவிட்டனர்!’ என சமூக வலைதளத்தில் எல்லை மீறி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துல்கர் சல்மானையும் இஷ்டத்துக்கு ட்ரோல் செய்யத் தொடங்கினர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத துல்கர் சல்மான் தற்போது விரிவாகப் பதிவிட்டு தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தமிழ் ரசிகர்களிடம் கோரியுள்ளார்.

இந்நிலையில் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்த சர்ச்சை பற்றிக் கேள்விப்பட்டு தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், “அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை, அது குறித்த சர்ச்சையையும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அதே நேரம் சில விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

விடுதலைப் புலி இயக்கம் தமிழகத்தில் பிரபலமான பிறகே, ‘பிரபாகரன்’ என்ற பெயரைத் தமிழகம் அறியும். அதற்கு முன் அப்படியோர் பெயர் இருந்ததில்லை.. இருந்தாலும் மிக மிகக் குறைவானவர்களே வைத்திருப்பார்கள். இந்தப் பெயர், கேரளாவில்தான் பல காலமாகப் பிரபலம். அதாவது , மலையாளிகளே இப்பெயரை அதிகம் வைத்துக்கொள்வார்கள். ‘பிரபாகரன்’ என்ற பெயரை மட்டும் வைத்து, அவரை, ‘மலையாளி’ எனப் பிரச்சாரம் செய்த போட்டி இயக்கங்கள் இருந்தன.

தவிர, ஈழத்திலும் கேரளாவிலும் பல பழக்கங்கள் ஒன்று போல் இருக்கும். இரு இடங்களிலுமே, தாங்கள் மிக மதிக்கும் தலைவர்களின் பெயர்களை, நாய்க்குச் சூட்டும் வழக்கம் உண்டு. மேலும், அடையாளங்களை வைத்துக் கிளர்ந்தெழுவதோ, விவாதம் செய்வதோ எந்தவிதத்திலும் யாருக்கும் பயன் தராது. ஏதோ சிறிது நேரம் பொழுது போகும் அவ்வளவுதான். உண்மையில் ஈழ மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய முயல்வதுதான். அகதிகளாக அல்லலுறும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான்.

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். ஈழப் போருக்குப் பிறகு, தங்களுக்குத் தமிழ் தேசிய உணர்வு வந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளும் பலர், தமிழ்நாட்டை அடக்கி ஆளும், இந்திய (மத்திய) அரசின் மீது கோபம் கொள்வதில்லை: சாதியை வைத்து நம்மைப் பிரிக்கும் எதேச்சதிகார இந்தத்துவாவை எதிர்ப்பதில்லை. நம்மைப் போலவே அதிகாரங்கள் இன்றி தவிக்கும் சகோதர இனத்தைச் சாடுவதில் குறியாக இருக்கிறார்கள்.

திரைப்படத்தில் நாய்க்குப் பெயர் வைத்த விவகாரத்தை விவாதிப்பது ஏற்கெனவே சொன்னது போல, நேரத்தைப் போக்க உதவும்.. தங்களை வெளிப்படுத்திக்கொள்ள உதவும். இரண்டும் பயனற்ற செயல்” எனத் தெரிவித்துள்ளார் கொளத்தூர் மணி.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

வரனே அவஷ்யமுண்டுதுல்கர் சல்மான்வரனே அவஷ்யமுண்டு சர்ச்சைபிரபாகரன்கொளத்தூர் மணிகொளத்தூர் மணி அறிக்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author