

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக புதிய கரோனா தொற்று இல்லை.
மேலும், ஏற்கெனவே கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதனால் தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 27 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த ஒரு மூதாட்டி உயிரிழந்துவிட்டார். மேலும், கடந்த சிலநாட்களாக 22 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.
இதையடுத்து தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 3 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் குணமடைந்தோர் விகிதம் 81 சதவீதம் ஆகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடைசியாக பசுவந்தனையைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 20-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு பிறகு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. அதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 12-ம் தேதிக்கு பிறகுபுதிய கரோனா தொற்று இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20-க்கு மேல் இருந்ததால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது 4 பேர் மட்டுமே கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
14 நாட்களாக புதிய தொற்று இல்லை எனில் சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலமாக மாறும். தற்போது 8 நாட்களாக புதிய தொற்று இல்லை. இன்னும் 6 நாட்கள் புதிய தொற்று இல்லையெனில் தூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறும்.
அதன் பிறகு 14 நாட்களுக்கு புதிய தொற்று இல்லை எனில் பச்சை மண்டலமாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.