

மதுவிலக்கு என்பது குறிப்பிட்ட சில கட்சிகளின் கோரிக்கை அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி னார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது 53-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி நகர், சத்தியமூர்த்தி நகர், பல்லவன் சாலை ஆகிய பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் திருமாவளவன் நேற்று ஈடுபட்டார். காலை 10 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்துக்கு நடந்த இந்த சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விசிக வினர் துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்தனர்.
அப்போது முதல்வரின் சுதந்திர தின உரையில் மதுவிலக்கு அறி விப்பு இடம்பெறாதது குறித்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், “டாஸ்மாக் மதுக் கடைகளால் வருகிற ரூ.30 ஆயிரம் கோடி வருமானத்தை இழக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தயாராக இல்லை. முதல்வரின் சுதந்திரதின உரை யில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், மது விலக்கு என்பது குறிப்பிட்ட சில கட்சிகளின் கோரிக்கை அல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையாகும்” என்றார்.
திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ‘கூட்டணி ஆட்சி கொள்கை மாநாடு’ சென்னை காமராஜர் அரங்கத் தில் இன்று நடக்கிறது. அதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மமக பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.