Published : 27 Apr 2020 12:32 PM
Last Updated : 27 Apr 2020 12:32 PM

ஊரடங்கு; வயிற்றுக்குச் சோறிடும் ரேஷன் கடைகள்: வரலாறும் கள எதார்த்தமும்!

திண்டுக்கல்லில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் | படம்: ஜி.கார்த்திகேயன்

கரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் ஏழை, எளிய கிராமப்புற மக்கள், கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் மிகப்பெரும் விளைவு பசிக்கொடுமை. பல்வேறு மாநிலங்களில் சொற்ப சம்பளத்துக்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வழியில் இறக்கும் சம்பவங்களை செய்திகளின் வாயிலாக அறிகிறோம்.

கரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை விட வாழ்வாதார முடக்கத்தால் பசிக்கொடுமை அதிகரித்து அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அரசு ஒன்றுமே செய்யவில்லை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதார நிபுணர்கள் பலரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இத்தகைய சுகாதார, பொருளாதார நெருக்கடி ஏற்படும் சமயத்தில் கடைசி மனிதனுக்கும் உணவு சென்று சேருவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் பொது விநியோகத் திட்டம்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மக்களிடம் போய்ச் சேர வேண்டிய உணவு தானியங்கள் இன்னும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்தியாவில் 10 கோடியே 84 லட்சம் பேர் பொது விநியோகத் திட்டத்திற்கு வெளியே இருக்கிறார்கள். இது, மொத்த மக்கள்தொகையில் 8% என ஜீன் டிரேஸ் (Jean Dreze) போன்ற பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பொது விநியோகத் திட்டத்தில் இணைக்கப்படாத குடும்பங்களில் பசிக்கொடுமை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் எதிரொலித்து வருகிறது. ஜார்க்கண்டில் இந்த ஊரடங்கு சமயத்தில் குடும்ப அட்டைகள் இல்லாத குடும்பங்களில் கிட்டத்தட்ட 20-22 பேர் பசியினால் உயிரிழந்திருக்கலாம் என, அம்மாநில உணவு உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால், அதனை மாநில அரசு மறுத்து வருகிறது.

குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், அம்மாநில மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் பொருட்களை வழங்குவதற்கான கட்டமைப்பு இல்லாமல் திணறுவதையும் நிர்வாக ரீதியாக பிரச்சினைகளைச் சந்திப்பதையும் அதனால் மக்கள் அலைக்கழிக்கப்படுவதையும் காண முடிகிறது.

யூனியன் பிரதேசங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. டெல்லியில் பெரும்பாலானோருக்கு குடும்ப அட்டைகள் இல்லாத நிலை உள்ளது. புதுச்சேரியில் முதல்வர் - துணைநிலை ஆளுநர் மோதல் ஏழை மக்களுக்கு அரிசி வழங்குவதிலும் தொடர்கிறது. ஏழை மக்களுக்கு அரிசிக்குப் பதிலாக அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஊரடங்கு சமயத்திற்குப் பிறகு புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லாத நிலை ஏற்படும் எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தின் பொது விநியோகத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்காக அன்றைய தினமே பல்வேறு நிதியுதவிகளை முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதில், முதன்மையானது அனைத்துக் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரணமாக வழங்கவும், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

இந்த 1,000 ரூபாய் நிவாரணம் மற்றும் விலையில்லாப் பொருட்களை பெற விருப்பம் இல்லாதவர்கள், இதற்கான வலைதளத்தில் மின்னணு முறையில் அல்லது செயலியில் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்புத் தொகுப்பாக தலா 1,000 ரூபாயும் மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளம் கண்டு, அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் மற்றும் ரூ.1,000 நிதியுதவி வழங்க, தமிழக அரசு முதல் கட்டமாக, 3,280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 1 கோடியே 71 லட்சம் குடும்ப அரிசி அட்டைகளும், 5 லட்சத்து 49 ஆயிரம் குடும்ப சர்க்கரை அட்டைகளும், 18 லட்சத்து 62 ஆயிரத்து 615 அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைகளும் உள்ளன.

காவலர் குடும்ப அட்டைகள், எப்பொருளும் வழங்கப்படாத அட்டைகள் என எல்லாவற்றையும் சேர்த்து, தமிழகத்தில் கிட்டத்தட்ட 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. தமிழகத்தில் 33 ஆயிரத்து 222 நியாய விலைக் கடைகள் உள்ளன. அனைத்துக் கடைகளும் கூட்டுறவுத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் காமராஜ்: கோப்புப்படம்

இதில் குடும்ப அரிசி அட்டைதாரர்களுள் கிட்டத்தட்ட 97 சதவீதத்தினருக்கு ரூ.1,000 மற்றும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

மே மாதத்திற்கும் உணவுப்பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பல கிராமங்களில் ரூ.1,000 உதவித்தொகை நேரடியாக சென்று வழங்கப்பட்ட நிலையில், மற்ற பொருட்கள் ஒரு நாளைக்கு 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டன. இன்னும் பல கிராமங்களில் பொருட்களும் கூட நேரடியாக சென்று வழங்கப்பட்டன.

ரேஷன் ஊழியர்களின் பணி

இந்தியாவின் பல மாநிலங்களில் பொது விநியோகத் திட்டம் மூலம் பயனாளிகளைச் சென்று சேராத நிலையில், தமிழகத்தில் எப்படிச் சென்று சேர்ந்தது?

பல்வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயரும் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்டுள்ள திருவண்ணாமலை மாவட்டம் தமிழ் மின் நகர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் விற்பனையாளராகப் பணியாற்றும் ஜோதிலட்சுமி கூறுகிறார்.

"எங்கள் ரேஷன் கடையில் மொத்தம் 840 குடும்ப அட்டைகள் உள்ளன. எங்கள் ஊரில் எத்தனையோ பேர் ரேஷன் பொருட்களைத்தான் பயன்படுத்துகின்றனர், இப்போது என்றில்லை, எப்போதும் இதனைத்தான் சமைத்து உண்ணுகின்றனர். நான் தினமும் வேலைக்குச் செல்ல பேருந்து நிலையத்திற்குச் செல்லும்போது, கூட்டமாக கூலி வேலைக்குச் செல்பவர்கள் வேலைக்கு செல்லக் காத்திருப்பார்கள். அவர்களுக்கு இப்போது ரொம்பக் கஷ்டம். ரேஷன் பொருட்கள் இல்லையென்றால் அவர்களின் நிலைமை மோசமாகிவிடும்" என்கிறார், ஜோதி.

மக்கள் ஊரடங்கு சமயத்தில் வெளியில் வரக்கூடாது என்பதால், அவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று உணவுப்பொருட்களை விநியோகித்ததாகக் கூறுகிறார் ஜோதி.

"மக்கள் வெயிலில் வந்து கஷ்டப்படக் கூடாது என நினைத்தோம். அதற்காக அரிசி , பருப்பு உள்ளிட்ட பொருட்களை டெம்போவில் எடுத்துக்கொண்டு வீடு, வீடாகச் சென்று பொருட்களைக் கொடுத்தோம். என் கணவர், சகோதரர் ஆகியோரும் இந்தப் பணியில் எனக்கு உதவியாக இருந்தனர்.

மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று, அவர்களை 3 மீட்டர் இடைவெளியில் வரிசையாக நிற்க வைத்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்துதான் விநியோகித்தோம். கடைக்கு வர வைத்தால் மக்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும் என்று நினைத்தோம். வீடுகளுக்கே சென்று அவற்றைக் கொடுப்பது சிரமம்தான். ஆனால் அதனைப் பார்த்தால் இவ்வளவு பேர் சந்தோஷமடைவார்களா?

நேரில் சென்று வழங்கினாலும் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முகக்கவசம் அணியாமல் கூட வந்தனர். நான் அவர்களுக்கு அதுகுறித்து அறிவுறுத்தினேன். ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களை நானே போனில் சொல்லி வாங்க வைப்பேன். இந்த சமயத்தில் பணி செய்ததை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்" என பெருமிதம் கொள்கிறார் ஜோதி.

நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்படும். அதற்கு ஜோதி இவ்வாறு பதில் கூறுகிறார்.

"பொருட்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. முன்பெல்லாம் கொஞ்சம் வசதியுள்ளவர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பார்கள். ஆனால், அவர்களே ஊரடங்கால் தங்களுக்குத் தேவைப்படும் என வாங்கிச் செல்கின்றனர். டிபன் செய்து சாப்பிடலாம் என நினைக்கின்றனர்.

எங்கள் பகுதியில் அனைவருக்கும் பொருட்களை வழங்கிவிட்டோம். 15 பேருக்குத்தான் இன்னும் பணம் கொடுக்கவில்லை. அவர்கள், கரோனா பயத்தால் கிராமங்களுக்குச் சென்றவர்கள். அவர்களைப் பொறுமையாக வந்து வாங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறோம்" என்றார் ஜோதி.

தூதூர்மட்டம் எனும் நீலகியின் மலைப்பாங்கான ஊரில் உள்ள நியாய விலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றும் அசார், அங்கு வசிக்கும் மக்களில் பலரும் தேயிலைத் தோட்டக் கூலி வேலை செய்து வந்த நிலையில், இப்போது அவை முடங்கியுள்ள சூழலில், நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்பட்ட பொருட்கள்தான் கைகொடுப்பதாகக் கூறுகிறார்.

"இங்குள்ள பலரும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாளைக்கு 300-400 ரூபாய் வரைதான் சம்பளம். அதுவும் இப்போது இல்லை. இங்கு 1,160 குடும்பங்கள் இருக்கின்றன. அதற்கு சிறிய தொலைவுகளில் 4 நியாய விலைக் கடைகள் உள்ளன. அதனால், மக்கள் பொருட்களை வாங்குவதில் சிரமம் இல்லை.

இங்கு 99 சதவீத மக்கள் ரேஷன் பொருட்களை நம்பித்தான் இருக்கின்றனர். ஏப்ரல் மாதத்துக்கான பொருட்களை அத்தனை பேருக்கும் கொடுத்துவிட்டோம். நேரடியாகத்தான் சென்று வழங்கினோம். காலை 9 மணிக்கு ஆரம்பித்தால் மாலை 6 மணிக்குத்தான் வேலை முடியும். ஒரு நாளைக்கு 50 குடும்பங்களுக்கு நேரடியாகப் பொருட்களை வழங்கினோம். சிரமம் தான். இதனை சேவையாகப் பார்த்ததால் ஒன்றும் தெரியவில்லை" என்கிறார் அசார்.

முகக்கவசம், கையுறைகளை நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு இன்னும் தரமானதாக வழங்கியிருக்கலாம் என்பது சில ஊழியர்களின் குறையாக இருக்கிறது. போதுமான அளவில் அவற்றைக் கொடுக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டாக இருக்கிறது.

ரேஷன் பொருட்கள் இல்லையென்றால்...

ஊரடங்கு சமயத்தில் மட்டுமல்லாமல் மற்ற சமயங்களிலும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை நம்பியிருக்கும் சில குடும்பங்களிடம் பேசினோம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட விஜயா என்பவரிடம் பேசினோம்.

"என் கணவர் தோட்டத்து வேலை செய்கிறார். நான், கணவர், 2 பிள்ளைகள் உட்பட மொத்தம் 6 பேர் இருக்கிறோம். எங்கள் ஊரில் எல்லோரும் ரேஷன் அரிசியைத்தான் சாப்பிடுவார்கள். 4 கிலோ மீட்டரில் எங்களுக்கு ரேஷன் கடை உள்ளது. வண்டியில் சென்றுதான் பொருட்களை வாங்கினோம். நாங்கள் செல்லும்போது ஏற்கெனவே 60 பேருக்கு டோக்கன் கொடுத்து விட்டனர். 11 மணிக்குச் சென்று ஒன்றரை மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தோம்.

இவ்வளவு சிரமம் இருந்தாலும், ரேஷன் கடையில் வாங்கும் பொருட்கள் எங்களுக்கு முக்கியம். ரேஷன் அரிசி இல்லையென்றால் நாங்கள் எப்படி சாப்பிடுவோம்? இப்போது மட்டுமில்லை, எப்போதும் ரேஷன் பொருட்களை நம்பித்தான் இருக்கிறோம். அரிசி எல்லாம் நன்றாக இருக்கிறது.

காட்டுக்குள் இருப்பதால் கீரையைப் பிடுங்கி சமைத்துச் சாப்பிடுவோம். சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாகக் கொடுக்கவில்லையென்றால் இந்த சமயத்தில் எங்களால் காசு கொடுத்து வாங்க முடியாது. ஆனால், ரேஷனில் போடும் பொருட்களின் அளவை அதிகப்படுத்தினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

வீட்டுக்கே வந்து ரூ.1,000 கொடுத்தார்கள். ஆனால், இந்த ரூ.1,000, 6 பேர் இருக்கும் குடும்பத்தாருக்கு எப்படிப் போதுமானதாக இருக்கும்? எங்கள் பகுதியில் இரு குடும்பங்கள் ஒரே வீட்டில் வசிப்பார்கள். ஒரு குடும்பத்திற்கு ரேஷன் அட்டை இருக்காது, அவர்கள் என்ன செய்வார்கள்?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

ஊரடங்கு சமயத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருளுக்காக கையேந்தும் நிலை வரவில்லை என்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், வளையல்காரர் தெருவைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ராமு.

"30 நாட்களாக எந்த வேலையும் இல்லை. வேலை இருக்கும் சமயத்தில் ஒரு நாளைக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கிடைக்கும். வேலையைப் பொறுத்து வருமானம் வேறுபடும். இந்தக் கஷ்ட காலத்தில் எங்களுக்குக் கொஞ்சம் உதவியாக இருப்பது ரேஷனில் வாங்கிய பொருட்கள்தான். அந்த அரிசியில் சாப்பாடும் செய்து சாப்பிடுவோம், டிபனும் சாப்பிடுவோம்.

எங்கள் பகுதியைப் பொறுத்தவரையில் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற நிலையே இல்லை. முன்பும் இப்படித்தான். பொருட்கள் காலியானாலும், பின்னர் வந்தபிறகு ரேஷன் கடை ஊழியர்களே அழைத்துக் கொடுப்பார்கள். இப்போது இவற்றைக் கொடுக்கவில்லையென்றால் குடும்பத்தை நடத்துவது கஷ்டமாகிவிடும். எங்களுக்கு வீட்டுக்கு அருகிலேயே வேனில் வந்து கொடுத்தனர். உணவுப்பொருளுக்காக எங்கும் கையேந்தும் நிலை இதனால் வரவில்லை" என்றார்.

குடும்ப அட்டைக்காக எழுதிக் கொடுத்தும் இன்னும் அவை வராத குடும்பங்களில் இந்த சமயத்தில், பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், நீலகிரி மாவட்டம் மேல்குப்பு கிராமத்தில் தோட்டக் கூலி வேலை செய்து வரும் சுரேஷ்.

"ரேஷன் கடையில் இப்போது கொடுத்துள்ள பொருட்கள் போதாது. இருந்தாலும் குறைந்தபட்சம் குடும்பங்களின் தேவையை அவை பூர்த்தி செய்திருக்கின்றன. இங்கு பலரும் தோட்டம், விவசாயக் கூலிகள் தான். தினமும் 250-300 ரூபாய் கிடைக்கும். இப்போது அந்த வருமானம் இல்லை. இந்தப் பகுதிகளிலும் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே வந்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கொடுப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இந்தப் பகுதியில் எனக்குத் தெரிந்தே 10 குடும்பங்களுக்கு எழுதிக் கொடுத்து ரேஷன் அட்டை கொடுக்கவில்லை. இருக்கப்பட்டவர்கள் ரேஷனில் பொருட்களை வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பார்கள். இப்போது அந்த நிலைமை இல்லாமல் ஆகிவிட்டது. இப்போது அவர்களுக்கே அது தேவையாக இருக்கிறது" என்றார், சுரேஷ்.

நகரங்களில் மாறும் மக்கள்

சென்னை போன்ற நகரத்திலும் எப்போதும் நியாய விலைக் கடையில் பொருட்களை வாங்கி மற்றவர்களுக்குக் கொடுத்துவிடும் ஒரு சிலரும், ஊரடங்கால், அரிசி உள்ளிட்ட பொருட்களை அவர்களே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ரேஷன் பொருட்கள் என்றாலே நன்றாக இருக்காது என்ற அவர்களின் கருத்தும் மாறத் தொடங்கியிருக்கிறது.

"ரேஷன் அரிசி என்றாலே நன்றாக இருக்காது, குண்டு குண்டாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. அதனாலேயே அதனைச் சமைக்க மாட்டோம். இப்போது ஊரடங்கால் வருமானம் ஸ்தம்பித்து நின்றுவிட்டது. அதனால், ரேஷன் அரிசியைத்தான் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். மோசம் என்று வெளியில் சொல்வது போன்று இல்லை. நன்றாகவே இருக்கிறது" என்கிறார், வியாசர்பாடியில் சாலையோரம் டிபன் கடை நடத்தும் பானு.

முறைகேடுகளும் குற்றச்சாட்டுகளும்

வலுவான கட்டமைப்பைக் கொண்ட தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்தால் இந்த சமயத்தில் மக்கள் பயனை அடைந்தாலும், அதில் சில குறைகளும் புகார்களும் இருப்பதாக கூறுகின்றனர் சிலர்.

ஊரடங்கு சமயத்தில் உணவு விநியோகம் உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறுகையில், "பல நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்காத அட்டைகளுக்கும் அவை வாங்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்படுகிறது. நெல்லுக்கு இறைத்தால் புல்லுக்குப் போகும் என்பது போல, தேவைப்படும் மக்களுக்குக் கொடுப்பதற்காக, தேவையற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டியிருக்கிறது" என்றார்.

இதுகுறித்து அம்மாவட்டத்தில் நியாய விலைக் கடையில் பணிபுரியும் பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் அனைத்துக் குடும்ப அட்டைகளும் ஸ்மார்ட் அட்டைகளாகிவிட்டன. ஸ்மார்ட் அட்டை கொண்டு வரவில்லையென்றாலும் போன் என்ணைப் பதிவிட்டு அதில் வரும் ஓடிபி எண்ணைப் பதிவு செய்து பொருள்களை வழங்கிவிடுகிறோம்.

என்னென்ன பொருட்கள் வாங்குகிறார்கள், யார் வாங்குகிறார் என்பது வெளிப்படையாகவே இருக்கும். இன்னொருவர் அட்டையை வைத்து வருபவர்களுக்கு பொருட்களைத் தரமாட்டோம். குடும்ப அட்டையில் பெயர் உள்ள ஒருவர் வந்தால்தான் பொருட்களைக் கொடுப்போம். என்னென்ன பொருட்கள் வாங்கப்படுகிறதோ, அவை உடனடியாக பயனாளிகளின் செல்போன் எண்ணுக்குக் குறுந்தகவலாகச் சென்றுவிடும்" என்றார்.

நியாய விலைக் கடைகளில் அவ்வப்போது நாம் கேட்கும் செய்தி, ஊழியர்களே பொருட்களை வெளிச்சந்தையில் விற்றுவிட்டனர் என்பதுதான். அது, ஊரடங்கு சமயத்திலும் நிகழ்வதாகக் கூறுகிறார், நீலகிரி, கோவை மாவட்டங்களில் பழங்குடி மக்களிடையே பணியாற்றும் 'ஆதிநிலம்' எனும் அமைப்பின் நிர்வாகி வீரப்பன்.

"உதகை, கோத்தகிரி, கூடலூரில் தோடர், குறும்பர், இருளர், பளியர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பழங்குடிகள் உள்ளனர். ரேஷன் பொருட்களை நம்பித்தான் அவர்கள் காலம் போய்க்கொண்டிருக்கிறது. கோத்தகிரியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் 80 அரிசி மூட்டைகளை விற்று பணியாளர்களே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில பகுதிகளிலும் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அரசியல்வாதிகளும் இதற்கு உடந்தையாக உள்ளனர். பழங்குடி மக்கள் இப்போதைக்கு உயிர் வாழ்வதே ரேஷன் பொருட்களை வைத்துதான். இந்தச் சம்பவங்களால் பழங்குடி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்" என குற்றம் சாட்டுகிறார் வீரப்பன்.

அனைவருக்கும் பொதுவான திட்டம்

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் சில குறைகள், குற்றச்சாட்டுகளைத் தாண்டி, வலுவான கட்டமைப்பைக் கொண்டது எப்படி? அது எப்படி ஊரடங்கு காலத்தில் சாமானிய மக்களுக்கு உதவுகிறது என்பது குறித்து, தமிழகத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சிகளை ஆய்வு செய்யும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் விஜயபாஸ்கரிடம் பேசினோம்.

பேராசிரியர் விஜயபாஸ்கர், எம்.ஐ.டி.எஸ்.

"மாநிலத்திற்குள்ளேயே மக்கள் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயருவது அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. கிராமங்களிலிருந்து பலரும் வாழ்வாதாரத்திற்காக நகரங்களுக்குச் செல்கின்றனர். தமிழக கிராமங்களில் விவசாயத்திலிருந்து முதன்மையாக வருமானம் ஈட்டும் குடும்பங்களின் எண்ணிக்கை 18%. அந்த வருமானமும் இப்போது கிடையாது. மீதமுள்ள கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேலாக விவசாயம் அல்லாத துறைகளிலிருந்துதான் மக்கள் வருமானம் ஈட்டுகின்றனர். அதில் கட்டுமானத் தொழில் முக்கியமானது. அதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தொழில் பிரதானமாக இருக்கிறது. உதாரணத்திற்கு திருப்பூருக்கு ஆடைத்தொழில். எல்லாத் தொழில்களும் இப்போது முடங்கிவிட்டன. இது, தமிழகம் போன்ற மாநிலங்களில் நகரங்களை மட்டுமல்லாமல் கிராமங்களையும் அதிகமாக பாதிக்கும்.

இப்படி இருக்கும் நிலையில்தான் தமிழகத்தின் திறன் வாய்ந்த, அனைவருக்கும் பொதுவான பொது விநியோகத் திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிக்கப்படும் பொருட்கள், தகுதிவாய்ந்த பயனாளர்களால் நுகரப்படாததன் விகிதம் தமிழகத்தில்தான் குறைவு. அதாவது, 100 கிலோ உணவுப்பொருள் விநியோகிக்கப்பட்டால் அதில் 96 கிலோ உரியவர்களைச் சென்று சேர்ந்துவிடும். 4% தான் மிச்சமாகும். மீதம் மக்களிடம் சேர்ந்துவிடும். இதன் தேசிய சராசரி 44%.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் 57% பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப்பொருளைத்தான் பயன்படுத்துகின்றனர். இதன் தேசிய சராசரி 29%.

கடந்த 15 ஆண்டுகளாக வறுமையின் விகிதம் தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கிராமம், நகரம் இரண்டிலும் குறைவாக வறுமை உள்ள மாநிலத்தில் தமிழ்நாடும் வந்துவிடுகிறது. அதற்கு முக்கியமான காரணம் வலுவான பொது விநியோகத் திட்டம்தான்.

மற்ற மாநிலங்களில் சிலருக்குத்தான் குடும்ப அட்டைகள், அவர்களுக்கு இவ்வளவுதான் உணவுப்பொருட்கள் என்பது போன்ற நிலை தமிழகத்தில் இல்லை. குடும்ப அட்டை வைத்துதான் வாங்க வேண்டும் என்ற நிலையும் இல்லை.

தமிழக பொது விநியோகத் திட்டத்தில் இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன. ஒன்று அனைவருக்குமானது, மற்றொன்று எளிமையாக அப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் கட்டமைப்பு" என்கிறார்.

தனியாரிடம் இல்லாத நியாய விலைக் கடைகள்

ரூ.1,000 நிவாரணம் நிச்சயம் மக்களுக்கு போதாது என்று கூறும் பேராசிரியர் விஜயபாஸ்கர், மாநில அரசு மட்டும் தனித்து இந்த நெருக்கடியை எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பது கேள்விக்குறிதான் என்கிறார்.

"ரூ.1,000 நிவாரணம் என்பது ஊரடங்கு சமயத்தில் நிச்சயம் போதாது. எனினும், மாநில அரசுக்கு வருவாய் வரும் அனைத்து வழிகளும் அடைபட்டிருக்கின்றன. ஜிஎஸ்டி வரி வருவாய் தமிழகத்திற்குப் போதுமான அளவில் வரவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் தான் உள்ளன.

மற்ற மாநிலங்களும் பொது விநியோகத் திட்டத்தைத் தளர்த்தி நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இருப்பது போன்ற உள்கட்டுமான அமைப்பு மற்ற மாநிலங்களில் இல்லை. உதாரணத்திற்கு டெல்லியிலேயே குடும்ப அட்டைகள் இல்லாத பலர் இருக்கின்றனர். அதனால், அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேருவதற்கான வாய்ப்பு இல்லை.

மத்திய அரசு தொகுப்பிலிருந்து வரும் அரிசி உள்ளிட்டவற்றை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கான கட்டமைப்பு இல்லை. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சிறப்பான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.

போக்குவரத்து, அதிகமான நியாய விலைக் கடைகள், அனைத்தையும் கண்காணிக்கும் அமைப்பு இருப்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது. இதை மற்ற மாநிலங்கள் முயற்சி செய்தாலும் செய்ய முடியாது. தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் தனியாரிடம் இல்லை. அனைத்தும் கூட்டுறவுத் துறையுடன் இணைந்தது. சில மாநிலங்களில் தனியார் நிறுவனங்கள் தான் நியாய விலைக் கடைகளை நடத்துகின்றன" என்றார்.

நீதிக்கட்சி தொடங்கி...

இத்தகைய வலுவான கட்டமைப்புக்கு நீதிக்கட்சி தொடங்கி, இன்று ஆளும் அரசுகள் வரை காரணம் என விவரிக்கிறார் விஜயபாஸ்கர்.

"உணவு இல்லையென்றால் என்னென்ன பற்றாக்குறைகள் நிலவும் என்ற புரிதல் நீதிக்கட்சி தொடக்கத்திலிருந்தே தமிழகத்தில் இருக்கின்றது. அப்போது உணவில்லாததால் பலரும் பள்ளிக்குப் போவதில்லை என்பது தெரிகிறது. முதல் கட்டமாக அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் முதன்முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்து காமராஜர் ஆட்சிக்காலத்தில் அரசு தனியாருடன் இணைந்து பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. 1967-ல் திமுகவின் 'படி அரிசி' திட்டம். அதன்பிறகு திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் அரிசிக்குக் கொடுத்த முக்கியத்துவம் இன்று 20 கிலோ அரிசி இலவசம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

கூலி விவசாயி ஒருவரை எஜமான் கட்டுப்படுத்தும் ஒன்று உணவுதானே. உணவு வந்துவிட்டதால் சுதந்திரம் கிடைக்கிறது. அப்போது அவர்களுக்குக் கட்டுப்பாடு இல்லை. அப்படியென்றால் வெளியில் சென்று குழந்தைகளைப் படிக்க வைக்க முடிகிறது. வேறு விஷயங்களை தேடிச் செல்ல வைக்கிறது.

ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது, கண்டிப்பாக சில இடங்களில் விடுபடுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. அவை களையப்பட வேண்டும்" என்றார்.

ரேஷன் பொருட்கள் தகுதியற்றவர்களுக்கு போய்ச் சேருவதாக எழுப்பப்படும் வாதம் குறித்து கூறும் விஜயபாஸ்கர், "இவர்கள் தான் இதற்குத் தகுதியானவர்கள், இவர்கள் தகுதியில்லாதவர்கள் என ஒரு திட்டத்தில் பிரிப்பது மிக சிக்கலானது. இன்றைக்கு வறுமையில் இல்லாதவர்கள் நாளை வறுமைக்குத் தள்ளப்படும் சூழல் ஏற்படலாம்.

நன்றாக உள்ள ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவர் விபத்தில் சிக்கினால் அக்குடும்பம் வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்று விடும். வறுமை என்பது மாறக்கூடியது. இதற்கு கரோனாவே ஒரு சிறந்த உதாரணம். உங்கள் யாருக்கும் வேலை இல்லாததால் நீங்கள் வறுமையில் உள்ளீர்கள். நமது மாநிலத்தில் 90 சதவீதத்தினரின் வருமானம் நிரந்தரமானதே அல்ல. வறுமையை நிலையானது என பார்க்கக்கூடியது ஆபத்தானது" என்று தெரிவித்தார்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x