'கொரோனா துயரில் நனையும் காலம்'- வாட்ஸ் அப்பில் வைரலாகும் திருமாவளவனின் புத்தகம்

'கொரோனா துயரில் நனையும் காலம்'- வாட்ஸ் அப்பில் வைரலாகும் திருமாவளவனின் புத்தகம்
Updated on
2 min read

கரோனா காலகட்டத்தில் திருமாவளவன் எழுதிய அறிக்கைகளின் தொகுப்பு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. பேசப்படாத பல பிரச்சினைகளைச் சொல்வதுடன், அதற்கான தீர்வுகளையும் சொல்கிற ஆவணமாக இருப்பதால், வாட்ஸ் - அப்பில் வைரலாகிக் கொண்டிருக்கிறது அந்நூல்.

இந்தியாவில் கரோனா தொற்றின் தீவிரம் அறியப்படும் முன்னரே அதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசியவர்களில் ஒருவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். மக்களவை நடவடிக்கைகளைத் தள்ளி வைக்கக் கோரி 13.3.20 அன்று சபாநாயகரிடம் கோரிக்கை மனுவும் அளித்தார். பசு மாட்டுக் கோமியத்தைக் குடித்தால், கரோனாவுக்குத் தீர்வு கிடைக்கும் என்று தவறான தகவல்களைப் பரப்புகிறவர்களுக்குப் பாடம் புகட்டக்கூடிய வகையில் பிரதமர் அறிவுரை சொல்ல வேண்டும் என்று மார்ச் 19-ல் மக்களவையில் வலியுறுத்தினார் திருமா.

இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு என்று 24.3.20 அன்று அறிவித்தார் பிரதமர் மோடி. அதனை நாட்டு மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடங்கி, தொடர்ந்து அரசுக்கு ஆக்கபூர்வமான யோசனைகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்து வந்தார் திருமா. அதில் சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் சில கோரிக்கைகள் இப்போதும்கூட நிறைவேற்ற வேண்டிய அவசியமுள்ள கோரிக்கைகள்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

உதாரணமாக, '100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்துகொண்டோருக்கு 30 நாள் ஊதியத்தை முன்பணமாக வழங்கிடுக', 'கடன் தவணைகளை ஆறு மாதத்துக்கு ஒத்தி வைத்திடுக', 'தனியார் பள்ளிக் கட்டண வசூலை 3 மாதங்களுக்குத் தள்ளி வைத்திடுக', 'தூய்மைப் பணியாளர்களுக்கு 3 மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்குக', 'நாடு தழுவிய முழு அடைப்பை நீட்டித்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்', 'சுங்கக் கட்டண வசூலை நிறுத்துக, சி.எஸ்.ஆர். நிதியையும், தொகுதி மேம்பாட்டு நிதியையும் அந்தந்த மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்' போன்ற அறிக்கைகளைச் சொல்லலாம்.

இந்த அறிக்கைகளை எல்லாம் தொகுத்து ‘கொரோனா துயரில் நனையும் காலம்’ எனும் புத்தகமாக்கியிருக்கிறார் 'நமது தமிழ் மண்' மாத இதழின் ஆசிரியரான பூவிழியன். 85 பக்கங்களைக் கொண்ட இந்நூலை கரிசல் பதிப்பகம் மின்னூலாக வெளியிட்டிருக்கிறது. பேசப்படாத பல பிரச்சினைகளைச் சொல்வதுடன், அதற்கான தீர்வுகளையும் சொல்லுகிற ஆவணமாக இது இருப்பதால், கட்சி எல்லைகளைத் தாண்டி வாட்ஸ் அப் வழியாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த நூலை வெளியிட்ட நோக்கம் குறித்து அவரிடம் கேட்டபோது, "இது ஏதோ கட்சியை விளம்பரப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட நூல் அல்ல. 35 ஆண்டுகளாக போராட்டக் களத்திலும், அரசியல் தளத்திலும் சுழன்றுகொண்டே இருந்த எழுச்சித் தமிழரை 35 நாட்களாக ஒற்றைப் புள்ளியில் அமர வைத்துவிட்டது கரோனா. அவரின் கால்கள்தான் ஓய்வைத் தழுவுகிறதே தவிர, சிந்தனைகள் அல்ல. இருந்த இடத்தில் இருந்தபடி அவர் இயங்கிக் கொண்டே இருக்கிறார், அரசையும், மக்களையும் இயக்கிக் கொண்டே இருக்கிறார் என்பதற்கான சாட்சி தான் இந்த நூல்.

நெருக்கடியான கால கட்டத்தில் மக்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்கள், யார் மக்களுடைய உண்மையான பிரதிநிதியாக செயல்படுகிறார்கள் என்பதை இதன் மூலம் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். இப்போது வந்திருப்பது வெறுமனே மின்னூல்தான். கரோனா காலம் முடிந்த பிறகு, இதன் பிறகு வந்த அறிக்கைகளையும் தொகுத்து அச்சு நூலாக வெளியிடுவோம்" என்றார் பூவிழியன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in