

ஊரடங்கால் சொந்த ஊரான வாழப்பாடிக்குச் செல்ல முடியாமல் திருச்சியில் தவித்த இளம் பெண்ணை மக்கள் நீதி மய்யத்தினர் வாகனம் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, கரிவேப்பிலைப் பட்டியை சார்ந்த கீர்த்தி என்பவர் தனது எட்டு மாதக் கை குழந்தையுடன் திருச்சி, பொன்மலைப் பட்டியில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன் வந்தார். அக்காவின் பிரசவத்திற்கு உதவி செய்வதற்காக வந்தவர், பிரசவம் முடிந்த பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முயன்றபோது 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் ஊர் திரும்ப முடியாமல் தவித்தார்.
சொந்த ஊரில் தனது வயதான தாய், தந்தை இருக்கிறார்கள். அவர்களைப் பராமரிக்க தன்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்றும், தனது கைக்குழந்தைக்கு அங்கு சென்றுதான் தடுப்பூசி போடவேண்டியுள்ளது என்றும் அவர் புலம்பி வந்தார். பலரிடமும் அவர் இதுகுறித்து கூறியிருந்த நிலையில், சென்னையிலுள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்துக்கும் இந்த தகவல் சென்றது.
இதையடுத்து தலைமை அலுவலகப் பொறுப்பாளர்கள் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களுக்கு இந்தத் தகவலை அனுப்பி உரிய உதவிகளைச் செய்யும்படி கேட்டிருந்தனர். இதையடுத்து மேற்படி தகவலை உறுதிபடுத்திகொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் S.R.கிஷோர்குமார், S.P.S.சதீஷ்குமார் ஆகியோர் கீர்த்தியை நேரில் சென்று சந்தித்தனர்.
அவர்களிடம், அக்காவின் சிறிய வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருப்பதாகவும், சாப்பாட்டிற்கே சிரமமாக இருப்பதாகவும் அதனால் எப்படியாவது ஊர் திரும்ப ஏற்பாடு செய்யும்படியும் கீர்த்தி கேட்டுக் கொண்டார். லாரியில் செல்வதாக இருந்தாலும் தயாராய் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
மக்கள் நீதி மய்யத்தினர் உடனடியாக இதை திருச்சி சரக காவல் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். உரிய விசாரணைக்குப் பிறகு தகவல் உண்மை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கீர்த்தியைச் சொந்த ஊருக்குச் செல்ல உரிய அனுமதியை அளித்தது திருச்சி காவல்துறை.
இதையடுத்து, 25-ம் தேதி இரவு கீர்த்திக்கு மக்கள் நீதி மய்யத்தினர் தங்கள் செலவில் கார் ஏற்பாடு செய்து அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர் . மறுநாள் காலையில், பத்திரமாக ஊர் வந்து சேர்ந்ததாக மக்கள் நீதி மய்யத்தினருக்குத் தகவல் கொடுத்த கீர்த்தி, தான் சொந்த ஊர் திரும்ப உதவிய அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.