

மதுரை தெற்குவாசல் காவல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிகின்றனர். இங்கு சிறப்பு எஸ்.ஐ., மற்றும் தலைமைக் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த காவல் நிலையப் போலீஸார், தங்களுக்கு கரோனா பரிசோதனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே தெற்குவாசல் காவல் நிலையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியது: முதல் கட்டமாக 500 போலீஸாருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. தெற்குவாசல், திடீர் நகர் மேலவாசல் பகுதியில் தற்போது போலீஸார், அவர்களது குடும்பத்தினர் என 180-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடந்துள்ளது. தொடர்ந்து மதுரையில் அனைத்து போலீஸாருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். தெற்குவாசல் காவல் நிலையத்தை இட மாற்றுவது குறித்து சுகாதாரத் துறையுடன் ஆலோசித்து காவல் ஆணையர் முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.