

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் உயர்ந்து காணப்பட்டது. இந்த சூழலில் வெப்ப சலனம் காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பெரம்பலூரில் 62 மி.மீ மழை பதிவானது.
இந்த கோடைமழையால் மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் தணிந்து காணப்பட்டது. உச்சபட்சமாக மதுரையில் 104 மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 100 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தற்போது சீதோஷ்ண நிலை சாதகமாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 30-ம்தேதி வரை 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும்.
திருச்சி, வேலூர் உட்பட மத்திய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்ரல் 27) கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆந்திராவை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல், கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.