

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று காலை திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குவித்து வைத்திருந்த பல டன் நெல் நனைந்து சேதமடைந்தது.
விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36, செங்கல்பட்டு மாவட்டத்தில் 39 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டுவரும் நிலையில் மேற்கண்ட 2 மாவட்டங்களிலும் நேற்று திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில், அரசு கொள்முதல் செய்வதற்காக விவசாயிகள் வைத்திருந்த பல டன் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால், அரசு கொள்முதல் நிலையங்களில் விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறும்போது, “2 மாவட்டங்களில் விரைவாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. ஜனவரி முதல் இதுவரையில் 49 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று திடீரென மழை பெய்ததால் சில இடங்களில் விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல் மழையில் நனைந்துள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றனர்.
போளூரில்..
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்தமழையால், போளூர் ஒழுங்குமுறைவிற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.