

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை,கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சி களில் முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதனால் மக்கள்வீடுகளில் முடங்கினர். சாலைகளும் வெறிச்சோடின.
தமிழகத்தில் கடந்த மார்ச் 24முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்குஅமலில் இருந்தாலும், கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தொற்று சங்கிலியை உடைக்க 4 நாட்கள் முழு ஊரடங்கை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நேற்று காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் நேற்று இயங்கவில்லை. மாநகராட்சி சார்பில்இயக்கப்பட்டுவரும் நடமாடும் காய்கறிக் கடைகள் மட்டும் செயல்பட்டன. சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கின.
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கினர். இதனால் மாநகர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆவின் பாலகங்களில் மட்டும் நேற்று காலை நீண்ட வரிசையில் நின்று பால் பாக்கெட்களை வாங்கிச் சென்றனர்.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் 4 நாட்களுக்குத் தேவையானகாய்கறிகளை பொதுமக்கள் வாங்கி விட்டதால், கோயம்பேடுசந்தையும் வெறிச்சோடியது.
விதிமீறல்களைத் தடுக்கும் பணியில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேபோல், கோவை, திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளிலும் நேற்றுபெரும்பாலான சாலைகள், கடைவீதிகள், உழவர் சந்தை், காய்கறிசந்தை் வெறிச்சோடிக் காணப்பட் டன. விதிகளை மீறி வெளியில் வந்த வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து, வழக்கு பதிவுசெய்தனர். இவ்விரு மாநகரங்களிலும் தலா 1,200 போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் செயல்பட்ட 43 தற்கா லிக, காய்கறி மார்க்கெட்கள் அனைத்தும் முழு ஊரடங்கால் அடைக்கப்பட்டன. மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர மற்றஅனைத்து கடைகளும் மூடப்பட்டன. இருப்பினும் மாநகராட்சி சார்பில் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்கப்பட்டன. முழு ஊரடங்கால் மாநகராட்சி முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நேற்று முன்தினமே அமலுக்கு வந்துவிட்டது. மாநகராட்சி சார்பில் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்பட்டன. இதனால் 99 சதவீத மக்கள் வீடுகளி லேயே முடங்கினர்.