

சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை பலத்த சூறைக் காற்று மற்றும் இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. அதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வெப்பச் சலனம் காரணமாகசென்னையில் நேற்று அதிகாலையில் பலத்த சூறைக்காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. சூறைக்காற்றில் பல்லவன் சாலை,ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமிசாலை, நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் 11 மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று மயிலாப்பூரில் 5 செமீ, புரசைவாக்கம்,தண்டையார்பேட்டை, கிண்டி, எண்ணூரில் தலா 3 செமீ, மாதவரம், பூந்தமல்லியில் தலா 2 செமீ, விமான நிலையம், தாம்பரம், நுங்கம்பாக்கம், பெரம்பூரில் தலா1 செமீ மழை பதிவாகியுள்ளது. திடீர் மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:
தென்கிழக்கு பகுதியில்இருந்து தமிழகம் நோக்கி வீசும்ஈரப்பதம் மிகுந்த காற்றின் வெப்பநிலை அதிகமாக இருந்ததால் அந்த காற்று நிலத்தில் தங்காமல் வான் நோக்கி சென்றது. தமிழகத்தின் மத்திய பகுதியில் எதிர் காற்று சுழற்சி நிலவிவரும் நிலையில் அதன் தாக்கத்தால், ஆந்திர பகுதியில் சூழ்ந்திருந்த மழை மேகங்கள் தமிழக கடலோரப் பகுதி மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் நேற்று அதிகாலை நல்ல மழையைக் கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.