

குமரி மீனவ கிராமத்தில் கிரிக்கெட் விளையாடியவர்களைக் கண்டித்த போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு போலீஸ் வாகனங்கள் உடைக்கப்பட்டன. புதுக்கடை எஸ்.ஐ. உட்பட இருவர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கை பொதுமக்கள் பின்பற்றும் வகையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தேங்காய்பட்டணம், மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத்துறையினர் மற்றும் போலீஸார் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேங்காய்பட்டணத்தை அடுத்த முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் போலீஸார் வாகனத்தில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். போலீஸார் அவர்களைக் கண்டித்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் கலைந்து செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றனர். இதற்கிடையே நேற்று மாலையில் புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீஸார் வாகனங்களில் ரோந்து சென்றவாறு கண்காணித்துள்ளனர். அந்நேரத்தில் மீண்டும் முள்ளூர்துறை மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது அவர்களை போலீஸார் கண்டித்துள்ளனர்.
இதில் இளைஞர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு நேரம் ஆன நிலையில் சில இளைஞர்கள் போலீஸார் மீது கல் வீசித் தாக்கியுள்ளனர். மேலும் அங்குள்ள தேவாலயத்தில் மணியடித்துள்ளனர். இதனால் கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டனர். அங்கு நின்ற போலீஸ் ஜீப், வேன் மீது கல்வீசித் தாக்கியதில் கண்ணாடி உடைந்து சேதமானது. கல்வீச்சில் எஸ்.ஐ. இளங்கோ உட்பட இரு போலீஸார் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையில் அதிரடிப்படை போலீஸார் முள்ளூர்துறை விரைந்தனர். விடிய விடிய அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பதற்றம் நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக முள்ளூர்துறையை சேர்ந்த ஸ்டான்லி (45), சீஜன் (25), வர்கீஸ் (50) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் அங்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.