மதுரையில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா: தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை 

மதுரையில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா: தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை 
Updated on
1 min read

மதுரையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த வாரம் வரை கரோன ஓரளவு கட்டுக்குள்ளாகவே இருந்தது. அப்படியே நோய்த் தொற்று கண்டறியப்பட்டாலும் ஏற்கெனவே பரவிய பகுதிகளிலே நோயாளிகள் உறுதி செய்யப்பட்டனர்.

இடையில் பல நாட்கள்; அன்றாடம் வெளியாகும் ‘கரோனா’

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் மதுரை மாவட்டம் இடம்பெறாமல் இருந்தது. ஆனால், 22-ம் தேதி 4 பேருக்கும், 23-ம் தேதி 2 பேருக்கும், 24-ம் தேதி 4 பேருக்கும், 25-ம் தேதி 4 பேருக்கும் என தொடர்ச்சியாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக மதுரை மாநகரப் பகுதியில் நோயாளிகள் வசித்த பகுதியில் வசிக்காதவர்களுக்கும், அவர்களுடன் நேரடித் தொடர்பில் இல்லாதவர்களுக்கும் ‘கரோனா’ தொற்று வர ஆரம்பித்தது. அதனால், புதிய பகுதிகளில் ‘கரோனா’பரவியதால் மதுரையில் சமூகப் பரவலாகும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

அரசு, உடனே மதுரை மாநகராட்சியில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மக்களைப் பாதிக்கா தவகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் இடையே கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒருங்கிணைப்பு இல்லை.

கடந்த சில நாளுக்கு முன், மாவட்ட நிர்வாகத்தின் வாகன அனுமதி அட்டை இல்லாத வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் ஆட்சியர் உத்தரவை ஒரு நாளுக்கு முன்பே போலீஸார் முந்திக் கொண்டு அவசர நடவடிக்கை எடுத்ததால் அத்தியாவசியப் பணிகளுக்கு செல்வோர் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டதால் ஆட்சியருக்கு நெருக்கடி ஏற்பட்டது.

அதிகாரிகளின் திட்டமிடுதல் இல்லாத நடவடிக்கையால் மதுரை மாநகராட்சியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கக்கப்பட்ட 15 பேரில் பேர் 14 பேர் மதுரை மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சியில் ஆணையூரில் 3 பேரும், செல்லூரில் 7 பேரும் வண்டியூரில் ஒருவரும், கூடல் நகரில் ஒருவரும், சிங்கந்தர் சாவடியில் ஒருவரும், பெரியார் பஸ்நிலையம் பகுதியில் ஒருவரும் என இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in