கரோனாவால் ரத்த வங்கியில் தட்டுப்பாடு: தன்னார்வக் குழுவினர் மூலம் ரத்த தானத்துக்கு ஏற்பாடு

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்புப் படை தன்னார்வக் குழுவினரிடமிருந்து ரத்த தானம் பெறும் முகாமை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்புப் படை தன்னார்வக் குழுவினரிடமிருந்து ரத்த தானம் பெறும் முகாமை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

கரோனா வைரஸ் காரணமாக ரத்த வங்கியில் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தன்னார்வலர்களைக் கொண்டு ரத்த தான முகாமை நடத்தியது.

தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பிரசவம் நடைபெற்று வருவதால், அங்குள்ள ரத்த வங்கியில் ரத்த இருப்பு குறைந்து தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது. அதே நேரத்தில் கரோனா ஊரடங்கால் தன்னார்வ அமைப்புகள் நடத்தும் ரத்த தான முகாம்களும் ரத்து செய்யப்பட்டதால், தனியார் ரத்த வங்கிகளிலும் ரத்தம் இருப்பு இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டது.

இச்சூழ்நிலையை உணர்ந்த தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கரோனா தடுப்பப் படை தன்னார்வ அமைப்புகளில் பணியாற்றும் தன்னார்வர்களைக் கொண்டு ரத்த தானம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தன்னார்வக் குழுவினர் பங்கேற்ற ரத்த தான முகாமினை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தொடங்கி வைத்து, ரத்த தானம் வழங்கியவர்களைப் பாராட்டினார். இந்த முகாமில் 50 பேர் இன்று ரத்த தானம் வழங்கினர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ராசா மிராசுதார் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்தம் இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, உடனடியாக ரத்த தான முகாம் நடத்தி தன்னார்வலர்களிடமிருந்து ரத்தம் பெறப்பட்டு ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கரோனா தடுப்புப் படை தன்னார்வலருக்குப் பரிசோதனை செய்யப்பட்ட பின் அவர்களிடமிருந்து ரத்த தானம் பெறப்பட்டது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in