Last Updated : 26 Apr, 2020 08:00 PM

 

Published : 26 Apr 2020 08:00 PM
Last Updated : 26 Apr 2020 08:00 PM

தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு மழை வாய்ப்பு; சென்னைக்கு எப்படி?- தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பகலில் மக்கள் வெளியே செல்லாமல் கூடியவரை தவிர்த்து வருகின்றனர். கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக கடும் வெயில் அடித்தாலும், சில மாவட்டங்களில் மாலையில் இடியுடன் கூடிய கோடை மழையும் பெய்து வருகிறது. இதனால் கோடையில் வெப்பம் தணிந்து வந்தது.

சென்னையிலும் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. தாம்பரம், புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, ஆலந்தூர், கிண்டி, பெரியமேடு, சூளைமேடு, ஓ.எம்.ஆர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, அசோக் நகர், கோடம்பாக்கம், விருகம்பாக்கம் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்ததால் பெரிய சிரமத்தக்கு ஆளாகவில்லை. இந்த மழை தொடருமா, எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறித்து இந்து தமிழ் திசை இணையதளம் சார்பில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் எழுதிவரும் பிரதீப் ஜானிடம் கேட்டோம்.

பிரதீப் ஜான்

ஏப்ரல் மாதத்தில் சென்னையில் கோடை மழை பெய்தது அரிதான நிகழ்வாா?

நிச்சயமாக. ஏப்ரல் மாதத்தில் சென்னைக்குப் பெரும்பாலும் மழைக்கு வாய்ப்பில்லை. கடந்த 2005-ம் ஆண்டில் காற்றழுத்தத் தாழ்வுநிலை வந்து நல்ல மழை கொடுத்தது. 2015-ம் ஆண்டில் தென்சென்னையில் நல்ல மழை பெய்தது. அந்த வகையில் சென்னையில் ஏப்ரல் மாதத்தில் மழைப்பொழிவு அரிதானது. மிகக் குறைவான அளவுக்கே வாய்ப்பு இருக்கும் சூழலில் இன்றைய மழை மகிழ்ச்சிதான். அரிதான நிகழ்வுதான்.

இந்த மழை தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?

கோடை மழை அல்லது வெப்பச் சலனத்தால் ஏற்படும் மழை கடந்த வாரத்திலிருந்து தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் பெய்து வருகிறது. உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் இந்த மழை வரும் 29-ம் தேதி வரை தொடர வாய்ப்புள்ளது. 30-ம் தேதியிலும் மழை இருக்கும் அது நமது அதிர்ஷ்டத்தைப் பொறுத்து மழை பெய்யலாம் அல்லது வாய்ப்பு இல்லாமலும் போகலாம்.

மே மாதத்தில் வெப்பச் சலன மழைக்கு வாய்ப்புள்ளதா?

இந்த மாத இறுதிக்குப் பின் மே மாதம் 2-வது வாரம் வரை மழைக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும். அதன்பின் மேலடுக்கு சுழற்சி உருவாகி மழைக்கு வாய்ப்பு உண்டு. அதை அந்த நேரத்தில் விரிவாகப் பேசலாம்.

சென்னைக்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை வாய்ப்பு?
சென்னை மட்டுமல்லாத காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி வரையிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மழை எந்த மாவட்டத்தில் சரியாகப் பெய்யும் எனக் கூற இயலாது. கடலில் இருந்து வரும மேகம் காற்றின் திசையைப் பொறுத்து செல்லும் இடங்களில் மழை வாய்ப்பு இருக்கும். அதிலும் 29-ம் தேதி மழைக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் நாட்களில் எந்த நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது?
சென்னையில் பெரும்பாலும் அதிகாலை நேரம் முதல் காலை வரை இடியுடன் கூடிய மழைக்கு வரும் 29-ம் தேதி வாய்ப்புள்ளது. காற்றோடு தொடங்கி இடி மின்னலுடன் மழை பெய்யும். இந்த மழை பெய்யலாம். சில நேரங்களில் வாய்ப்பில்லாமலும் போகலாம்.

தென் மாவட்டங்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது?

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை மேற்குத்.தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு அடுத்துவரும் நாட்களில் வாய்ப்பு இருக்கிறது. கேரளாவிலும் மழை பெய்யும்.

அதேபோல, உள்மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழையைப் பொறுத்தவரை எங்கு பெய்யும் எனக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஆனால் 29-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

சென்னையில் இன்று பெய்த மழைகூட நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் உருவான மேகக்கூட்டம் அதிகாலை நேரத்தில் சென்னையை அடைந்து மழை கொடுத்துவிட்டு, பாலக்காடு வரை சென்றது. ஆதலால், போகிற போக்கில் மேகக்கூட்டம் மழையைக் கொடுக்கும்.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x