

உணவுக்கு வழியின்றித் தவித்து கர்நாடக மாநிலத்தில் இருந்து கால்நடையாக கன்னியாகுமரிக்குப் பயணமான ஆறு இளைஞர்களுக்கு உணவளித்து, வாகன வசதி செய்து கொடுத்த சேலம் போலீஸாரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
ஊரடங்கில் சிக்கிய ஆறு இளைஞர்கள்
கரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் வேலைக்காகச் சென்ற இளைஞர்களும், தொழிலாளர்களும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பெரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிராம் (19), ராஜாபார்த்தி (20), விக்னேஷ் (22), ராமராஜ் (23), சிதம்பரத்தைச் சேர்ந்த அருள் (19), திருவாரூரைச் சேர்ந்த சுரேந்திரன் (20) ஆகிய ஆறு பேரும் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் ‘நெட்வொர்க் மார்க்கெட்டிங்’ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பெல்காமில் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்துக்குச் சொந்தமான அறைகளில் தங்கியிருந்தனர். ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உணவு கிடைக்காமல் சாப்பிட வழியின்றித் தவித்த ஆறு இளைஞர்களும், இரண்டு தினங்களுக்கு முன்பு பெல்காமில் இருந்து சொந்த ஊருக்கு கால்நடையாகப் பயணம் செய்ய முடிவெடுத்தனர்.
இளைஞர்களின் கண்ணீர்க் கதை
இதையடுத்து, நிறுவனம் பெங்களூரு வரை வாகன வசதி ஏற்படுத்திக் கொடுத்ததால், ஆறு இளைஞர்களும் தமிழ்நாடு எல்லை வரை வந்து சேர்ந்தனர். ஓசூரில் இருந்து கால்நடையாகப் பயணத்தைத் தொடங்கிய ஆறு இளைஞர்களும், 48 மணிநேரத்தில் 200 கி.மீ., கால்நடையாக சேலம் வந்து சேர்ந்தனர். வெளிமாநிலத்தில் இருந்து கால்நடையாக சேலம் கொண்டலாம்பட்டி வந்து சேர்ந்த இளைஞர்கள் ஆறு பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து, விசாரித்தனர். உணவுக்கு வழியில்லாத காரணத்தால் சொந்த ஊருக்குக் கால்நடையாகச் செல்வதாக கண்ணீர் மல்க இளைஞர்கள் போலீஸாரிடம் கூறினர்.
போலீஸார் உதவிக்கரம்
இளைஞர்கள் மீது இறக்கப்பட்ட சேலம் போலீஸார் ஆறு பேருக்கும் உடனடியாக சாப்பாடு வாங்கிக் கொடுத்து, லாரி மூலம் இளைஞர்களின் சொந்த ஊரான கன்னியாகுமரி, சிதம்பரம், திருவாரூருக்கு அனுப்பி வைக்க சேலம் மாநகர போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். கருணை உள்ளத்துடன் போலீஸார் ஆறு இளைஞர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்ததைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
பசியுடன் நடைபயணம்
இதுகுறித்து இளைஞர் ஜோதிராமிடம் கேட்ட போது, ''கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெல்காமில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் நாங்கள் ஆறு பேரும் பணிக்குச் சேர்ந்தோம். தற்போது, முழு அளவிலான ஊரடங்கு காலம் அறிவிக்கப்பட்ட நிலையில், உணவுக்கு வழியின்றித் தவித்து வந்தோம். கடந்த இரண்டு நாட்களில் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிட்டு, பசியுடன் சேலம் வந்து சேர்ந்தோம். வழியில் போலீஸார் எங்களை மறித்தாலும், எங்கள் நிலையை அறிந்து கால்நடையாக சொந்த ஊருக்குச் செல்ல அனுமதித்ததால், சேலம் வரை நடந்து வந்து சேர்ந்தோம். சேலம் போலீஸார் எங்களின் ஊருக்குச் செல்ல வாகன வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளமைக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.