

சேலம் அரசு மருத்துவமனை கரோனா தனிப் பிரிவு வார்டில் பணியாற்றும் செவிலியர்களுக்கு சத்தான உணவும், தேவையான அறை வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளின் நடவடிக்கைக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் 30 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா நோயாளிகள் தனி வார்டில் தங்க வைக்கப்பட்டு, 24 மணி நேரம் மருத்துவர், செவிலியர்கள் கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று மைய பிரிவில் ஒரு ஷிப்ட்டுக்கு 30 செவிலியர்கள் வீதம் நாளொன்றுக்கு 120 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு, இரண்டு மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தார். ஆனால், முதல்வர் அறிவித்து ஒரு மாதம் கடந்த நிலையிலும், அரசாணை பிறப்பிக்கப்படாததால், ஊக்கத்தொகையாக வழங்கும் சம்பளம் செவிலியர்களுக்கு வந்து சேரவில்லை.
கரோனா தொற்று சிகிச்சை மையத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு தரமான தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு மருத்துவமனை சமையல் கூடத்துக்கு மேல் உள்ள கட்டிடத்தில் போதுமான வசதிகளின்றி செவிலியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல, கரோனா தொற்று சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களுக்கு சப்பாத்தி, ரொட்டி காலை உணவாகவும், மதியம் சிக்கன் பிரியாணி (அளவு பாக்கெட்டில்) வழங்கப்படுகிறது.
இரவு இட்லி, உப்புமா, தோசை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு காலை இட்லி, சப்பாத்தி, ஒரு டம்ளர் பால், பகல் 11 மணிக்கு சத்தான பழரசம் அல்லது சூப்பு வகையும், மதியம் உணவு, சாம்பார், ரசம், கீரை பொறியல், சுண்டல் ஆகியவை வழங்கப்படுகின்றன. மாலை நேரத்தில் வேகவைத்த சுண்டல், ஒரு டம்ளர் பால் வழங்கப்படுகிறது. அதேபோல இரவு நேரத்தில் சப்பாத்தி, பருப்பு குருமா ஆகியன கொடுக்கப்படுகின்றன.
கரோனா தொற்று பாதித்தவர்களுடன் பணியாற்றும் செவிலியர்களுக்கு சரியான உணவு வழங்கப்படுவதில்லை என்றும் சத்தான உணவு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவிலியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதேபோல, அவர்கள் தங்குவதற்கு போதுமான வசதிகளையும் மருத்துவமனை நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் செவிலியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.