Published : 26 Apr 2020 06:19 PM
Last Updated : 26 Apr 2020 06:19 PM

கரோனா முன்கள வீரர்களுக்கான பாதுகாப்புக் கருவிகளை வழங்குவதில் தொடர்ந்து அரசின் அலட்சியம்: ஸ்டாலின் கண்டனம்

மருத்துவப் பணியாளர்கள் - காவல்துறையினர் - தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள வீரர்களுக்கான பாதுகாப்புக் கருவிகளை வழங்குவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் எடப்பாடி பழனிசாமி அரசு, அதன் மூலமாக மக்களின் நலனையும் அலட்சியப்படுத்தி, மூன்றாம் நிலைக்குத் தள்ளி வருகிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில், அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்ற எடப்பாடி பழனிசாமி அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையால், நோய்த்தொற்று பரவல் குறித்த ஐயப்பாடும் பயமும் மேலும் அதிகரித்துள்ளது.

மக்களின் உயிரைப் பற்றியும் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்தும் அக்கறை இல்லாத ஆட்சியாளர்களால், சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அனைவரின் நெஞ்சத்தையும் அதிர வைத்துள்ளது.

கரோனா தொற்று அறிகுறிகளுடன், மூச்சுத் திணறல் காரணமாக அவசரச் சிகிச்சைப் பிரிவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்குச் சிகிச்சையளிக்க வேண்டிய மருத்துவர்களுக்குத் தற்காப்பு உடை (PPE) அரசுத் தரப்பிலிருந்து தரப்படாததால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்க முடியாமல், மூத்த மருத்துவர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள் கண்ணெதிரே அந்த இளைஞர், எந்த சிகிச்சையும் கிடைக்கப் பெறாமல் துடிதுடித்து இறந்துபோனார் என்ற செய்தியை பிரபல தமிழ் தின இதழ் குழுமத்தின் ஆங்கில நாளேடு முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு, அரசாங்கத்தின் அலட்சியத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது.

பேரிடர் காலத்தில், மருத்துவத்துறைக்கான போதிய அடிப்படை வசதிகளின்றி ஓர் உயிரைப் பலியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அவசர சிகிச்சை மருத்துவப் பிரிவில் பணியாற்றுபவர்களுக்குக் கூட, “Personal Protective Equipment” எனப்படும் தற்காப்பு கவச உடைகளைத் தமிழக அரசு வழங்கவில்லை என்பதே, அந்த இளைஞருக்குச் சிகிச்சை கிடைக்காமல் போனதற்குக் காரணம் ஆகும்.

தலைநகர் சென்னையின் முதன்மை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் நிலையே இத்தனை பரிதாபகரம் எனில், தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்; அதை நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது. இருதய சிறப்பு மருத்துவர் ஒருவர் ஏற்கெனவே கரோனா தொற்றுக்கு ஆளானதற்கும், அரசின் இதுபோன்ற அலட்சியமும் முறையான வழிகாட்டுதல் இன்மையுமே காரணம் ஆகும்.

அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களைத் தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அர்ப்பணிப்போடு பணியாற்றும் சுகாதார ஊழியர்களை நெஞ்சாரப் பாராட்டுவதோடு, அவர்களைப் பாதுகாக்கும் கடமை தலையாயது என்பதை அரசுக்குச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

மருத்துவப் பணியாளர்கள் – காவல்துறையினர் - தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள வீரர்களுக்கான பாதுகாப்புக் கருவிகளை வழங்குவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் எடப்பாடி பழனிசாமி அரசு, அதன் மூலமாக மக்களின் நலனையும் அலட்சியப்படுத்தி, மூன்றாம் நிலைக்குத் தள்ளி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போதைய நோய்த்தொற்று சூழலில், அந்தந்த மாநில அரசுகளும் ராஜஸ்தானில் உள்ள தங்கள் மாணவர்களைப் பாதுகாப்பாகச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதில் அக்கறை காட்டி வருகின்றன.

அங்கு தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதிமுக அரசு உடனடியாக அந்த மாணவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான பாதுகாப்புடன் கூடிய பயணத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x