புதுச்சேரியில் திமுக எம்எல்ஏவின் மதுக்கடையில் நூதன முறையில் மதுபாட்டில்கள் திருட்டு; இருவர் கைது

புதுச்சேரியில் திமுக எம்எல்ஏவின் மதுக்கடையில் நூதன முறையில் மதுபாட்டில்கள் திருட்டு; இருவர் கைது
Updated on
1 min read

திமுக எம்எல்ஏவின் மதுக்கடையில் எக்ஸாஸ்ட் பேன் (வெளியேற்றும் விசிறி) அருகேயுள்ள துளை வழியாக நுழைந்து அங்கிருந்து மதுபாட்டில்களைத் திருடிய இருவரை போலீஸார் புதுச்சேரியில் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் 469 மதுபானக் கடைகள் மற்றும் 98 சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் உள்ளன. ஊரடங்கையொட்டி அனைத்து மதுபானக் கடைகள், குடோன்கள், வடிசாலைகள் மூடப்பட்டன. ஆனால் தொடர்ந்து மதுபான விற்பனை கள்ளச்சந்தையில் இருப்பதாகப் புகார்கள் வந்ததையடுத்து ஊரடங்கு தொடங்கி இரண்டு வாரங்களுக்குப் பிறகே அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. எனினும் தொடர்ந்து மதுவிற்பனை நடந்ததாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஊரங்கின்போது மதுக்கடைகளில் இருந்த கணக்கைச் சரிபார்க்க ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. கணக்கு சரியில்லாத 36 மதுக்கடைகளின் உரிமம் ரத்தானது.

கள்ள மது விற்றால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத் தலைமை அதிகாரி விசாரிக்கப்படுவார் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்ட சூழலில் வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டன. ஆய்வுக்குழுவில் சென்ற தாசில்தார் மதுபாட்டில்கள் எடுத்துச் சென்றதாகக் கைதானார். அவருடன் அரசு அதிகாரிகள், போலீஸார் என மொத்தம் 8 பேர் கைதானார்கள். பல போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

இச்சூழலில் மது விற்பனை தொடர்பாக போலீஸார் கண்காணிப்பில் இருந்து வந்தனர். புதுச்சேரி பெரிய கடை போலீஸார், ரெங்கபிள்ளை வீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்து கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ஒரு முழு மதுபாட்டிலும் மற்றும் பல குவார்ட்டர் பாட்டில்களும் இருந்தன. இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்.

இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, ரெங்கபிள்ளை வீதியில் உள்ள மதுபானக்கடையின் மேற்பகுதியில் இருந்த எக்ஸாஸ்ட் பேன் உள்ள இடத்திலுள்ள துளை மூலம் உள்ளே சென்று மதுபாட்டில்களைத் திருடியிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விஜய் (21), தினேஷ் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்து, திருடிய மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

போலீஸார் தரப்பில் கேட்டதற்கு, ரெங்கபிள்ளை வீதியில் மதுபாட்டில்கள் திருடப்பட்ட மதுக்கடை திமுக எம்எல்ஏ சிவாவுக்குச் சொந்தமானது. அக்கடையில் ஊரடங்குக்குப் பிறகு கடை சீல் வைக்கப்பட்டது. தனி ஆய்வுக்குழு வந்த பிறகு கணக்குகளைச் சரிபார்த்த பிறகே முழுமையாக விவரம் தெரியவரும்" என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in