

புதுச்சேரியில் இன்று நல்ல மழைப்பொழிவு இருந்ததால் ஞாயிறன்று மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. அதே நேரத்தில் மழைப் பொழிவு டெங்கு சீசன் அறிகுறி என்று சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன் குமார் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா சிகிச்சை நிலை தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
''புதுச்சேரியில் கரோனா தொற்றுடன் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களின் உடல் நலன் மேம்பட்டு வருகிறது . ஞாயிறு காலை நல்ல மழைப்பொழிவு இருந்ததால் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இல்லை. புது மழைப்பொழிவு டெங்கு சீசன் அறிகுறி. அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளோம். வீட்டைச் சுற்றி சிறு பாட்டில் உள்ளிட்ட எதிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு இருந்தால் உடனே அப்புறப்படுத்துங்கள்.
புதுச்சேரியில் மக்களிடத்தில் தனி மனித இடைவெளி மூன்று மாதங்களுக்கு அவசியம். வீடுதோறும் இரண்டாம் கட்ட ஆய்வைத் தொடங்குகிறோம். புதிதாக கரோனா பாசிட்டிவ் ஏதும் வரவில்லை. மக்களை நேரடியாக அணுகிப் பணியாற்றும் பொது சுகாதாரப் பணியாளர்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கு கரோனா தொற்றுள்ளதா என்று சோதனை செய்ய உள்ளோம். புதுச்சேரியில் புதிதாக யாருக்கும் சமூகப் பரவலில் கரோனா தொற்று இல்லை. அதேபோல் சளி, இருமல் இருந்தால் அது கரோனா இல்லை''.
இவ்வாறு டாக்டர் மோகன் குமார் தெரிவித்தார்.