Published : 26 Apr 2020 02:15 PM
Last Updated : 26 Apr 2020 02:15 PM

பெண்களை ஏமாற்றி அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பணம் பறித்த குற்றவாளி; சிபிஐ விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பெண்களை ஏமாற்றி அந்தரங்கப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுப் பணம் பறித்த சமூக விரோதிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் மூலமாக நட்பு ஏற்படுத்தி, ஏராளமான பெண்களைக் காதலிப்பதாக கூறி பாலியல் உறவு வைத்து, அவற்றைப் புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததோடு குற்றம் சாட்டப்பட்ட காசி, பணம் தர மறுத்த பெண்களின் அந்தரங்கப் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்து முகநூலில் பதிவேற்றியிருக்கிறார். இந்தக் கொடூர சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

ஏற்கெனவே, அருப்புக்கோட்டை மாணவிகள் பாலியல் வற்புறுத்தல் வழக்கு, பொள்ளாச்சியில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கு போன்றவற்றைத் தொடர்ந்து நாகர்கோவில் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் அடக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால், அச்சத்தின் காரணமாக ஒருவரும் இதுவரை புகார் கொடுத்ததாகத் தெரியவில்லை.

ஆனால், சென்னையைச் சேர்ந்த ஒரு பெண், ஏழு லட்ச ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இழந்து, தனது அந்தரங்கப் படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதைப் பார்த்து அதிர்ந்து, நடந்த சம்பவங்களை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

அதன்படி, கோட்டார் காவல்துறை 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, காசியின் செல்போன் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது காசியும் அவனது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுக்கடுக்காக இத்தகைய பாலியல் கொடுமைகள் இணையதளப் புகார்கள் வந்தபோதிலும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இச்சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. காசி மீது ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு ஒரு பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தியதாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளார். அப்போதே சட்டப்படியாக முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் அடுத்தடுத்து குற்றங்கள் நடக்காமல் தடுத்திருக்கக முடியும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

2019 ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற அருப்புக்கோட்டை சம்பவத்திலும் குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை. இத்தகைய போக்கு காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்வது மட்டுமின்றி, சமூக விரோதிகள் எதையும் செய்யலாம் என்ற துணிச்சலொடு அக்கிரமங்களைத் தொடர்வதற்கு வழிவகுக்கின்றன என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாகத் தெரிவிக்க விரும்புகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழகத்தினுடைய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இதர மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் என்ற சூழலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் காவல்துறையினர் மட்டும் விசாரித்தால் திறம்பட வழக்கை நடத்த முடியாது. உள்ளூர் நிர்பந்தங்களும் இருக்கும் என்பதால் மத்திய புலனாய்வுத் துறையின் கீழ் விசாரணை நடத்தப்படுவதே பொருத்தமாக இருக்கும்.

எனவே, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. மேலும், இக்கொடுமையைப் புரிந்துள்ள காசி மற்றும் அவனது நண்பர்கள், அவர்களுக்குத் துணைபுரிந்த அனைவரையும் தாமதமின்றிக் கைது செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை இன்றைய சமூகச் சூழலில் வெளியே சொல்வதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தயக்கம் இருக்கும் என்பதால் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி காவல்துறையை அணுக வைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்துவது ஆணாதிக்க சமூகத்தில் இயல்பாக உள்ள பின்னணியில் காவல்துறையோ, ஊடகங்களோ, சமூகமோ பெண்களின் மீது குற்றம் சுமத்துவதைத் தவிர்க்க வேண்டுமெனவும், பெண்களை ஏமாற்றி இத்தகைய கொடூரச் செயல்களைப் புரிந்து வரும் சமூக விரோதிகளை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்ப முன்வர வேண்டுமெனவும் பொது மக்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கக்கூடிய விதத்தில் துரித விசாரணை அமைய வேண்டுமெனவும், இனிமேல் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழா வண்ணம் புகார்கள் வந்தவுடனேயே அதன் மீது விரைவாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிக்குத் தகுந்த தண்டனையைக் கிடைக்கச் செய்வதன் மூலமே இப்படிப்பட்ட குற்றங்களைத் தடுக்க முடியுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எத்தகைய அரசியல் நிர்பந்தத்திற்கும் இரையாகாமல் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x