

கரோனா ஊரடங்கால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்துவரும் வேளையில் புதிய சிக்கலாக தமிழகத்தில் மளிகைப் பொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொருட்களை பேக்கேஜ் செய்யும் துறை முடக்கப்பட்டிருப்பதால் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதைச் சரி செய்ய வேண்டும் என கனிமொழி முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கரோனா தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியத் துறைகள் தவிர அனைத்துச் செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் செல்லாமல் இருக்க மளிகை, காய்கறிகள் ஆன்லைன் மூலமும் விநியோகிக்கப்படுகிறது.
இந்தக் கடுமையான காலகட்டத்தில் ஒவ்வொரு துறையும் ஒன்றையொன்று சார்ந்து இயங்கினால்தான் பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க முடியும். இதற்கு அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைபொருட்கள் சந்தையைத் தடையின்றி அடையவேண்டும். அதற்கு போக்குவரத்தும், கூலித்தொழிலாளர், வாகனங்கள் இயக்கம் முக்கியம். அவ்வாறு வரும் பொருட்கள் மக்களைச் சென்றடைய அவை முறையாக பேக் செய்யப்பட வேண்டும்.
இதற்கான மூலப்பொருட்கள் தடையின்றிக் கிடைத்தால் மட்டுமே உணவு, மளிகைப்பொருட்கள், காய்கறிகள் தடையின்றி மக்களைச் சென்றடைய முடியும். தற்போது ஏற்பட்டுள்ள பொது முடக்கத்தால் பேக்கேஜ் துறை செயல்படாமல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பேக்கேஜ் துறைக்கான செயல்பாடு முடக்கப்பட்டால் அனைத்து விநியோகமும் பாதிக்கப்படும். இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவது சாதாரண ஏழை, நடுத்தர மக்கள்தான். பொது விநியோகமும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அத்தியாவசியத் துறைகளில் இதுவும் ஒன்று என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டும் தமிழக அதிகாரிகளால் இத்துறை செயல்படாமல் இருப்பதாகவும், உடனடியாக முதல்வர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
“தமிழகத்தில், உணவு மற்றும் மளிகைப் பொருட்களை பேக்கெஜ் செய்வதற்கான பொருட்களைத் தயாரிக்கும் துறை பொது முடக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இதற்கு விதிவிலக்கு அளித்திருந்தும், தமிழகத்தில் நெருக்கடி நிலவுகிறது.
இதன் காரணமாக, உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. @CMOTamilNadu உடனடியாகத் தலையிட்டு, தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்”.
இவ்வாறு கனிமொழி கோரிக்கை வைத்துள்ளார்.