Published : 25 Apr 2020 11:38 PM
Last Updated : 25 Apr 2020 11:38 PM

சென்னையில் 144 ஊரடங்கு விதி மீறல்: ஒரு மாதத்தில்  1,13,904 வழக்குகள், 45, 378 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் சென்னை பெருநகரில் 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக கடந்த மார்ச் 24 முதல் ஏப் 23 வரை ஒரு மாதத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரிவில் 1,13,904 வழக்குகள், பதிவு செய்யப்பட்டு 45, 378 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. அவசியமின்றி வெளிவருபவர்கள் மீது 188 பிரிவு மற்றும் 269, 270 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதவிர போக்குவரத்து போலீஸாரும் வாகன சோதனை, ஹெல்மட் அணியாமல் வருவது ஆவணங்கள் இல்லாமல், லைசென்ஸ் இல்லாமல் வருவது போன்ற காரணங்களுக்காக வழக்குப்பதிவு வாகனம் பறிமுதல் உள்ளிட்டவற்றை பறிமுதலும் செய்தனர். கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு மாற்றங்கள் வாகன சோதனையில் கொண்டுவரப்பட்டது.

தினமும் ஆயிரக்கணக்கில் வழக்குகள் போடப்பட்டன. இந்நிலையில் ஒரு மாதம் நிறைவடைந்ததையடுத்து ஒரு மாதத்தில் போடப்பட்ட வழக்குகள் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் குறித்த தகவலை சென்னை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

அதுகுறித்த விபரம் வருமாறு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சிஆர்பிசி 1973 பிரிவு 144ன் படி 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. அதன்பேரில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைத்தும், ரோந்து பணிகள் மூலம் தீவிரமாக கண்காணித்தும், 144 தடை உத்தரவை மீறி அத்தியவாசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்பேரில், கடந்த மார்ச் 23 முதல் ஏப் 24 வரை சென்னை பெருநகரில், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் மூலம் தீவிரமாக கண்காணித்து, 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக 32,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 32,803 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 20,972 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பிரிவினர் மூலம் கண்காணித்து, 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக 81,490 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23,216 இருசக்கர வாகனங்கள், 1,016 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 174 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 24,406 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, தமிழக அரசு நாளை (26/4) காலை 06.00 மணி முதல் 29.4.2020 இரவு 09.00 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், நாளை முதல் 144 தடை உத்தரவு மீறி அத்தியாவசியமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே, மேற்படி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x