

சென்னை அடையாறு காந்தி நகரில் புதிதாக சூட்டப்பட்ட பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலையின் பெயர் பலகையை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் சென்று திறந்துவைக்கிறார்.
‘மாலை முரசு’ நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் வீடு அமைந்துள்ள அடையாறு காந்தி நகர் 4-வது பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 8-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், ‘பத்திரிக்கை துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, தனி இடத்தை பெற்ற பா.ராமச்சந்திர ஆதித்தன் நினைவை போற்றும் வகையில் சிறப்பு செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். ‘மாலை முரசு’ இயக்குநர் கண்ணன் ஆதித்தன் கோரிக்கையை ஏற்று, அடையாறு காந்தி நகர் 4-வது பிரதான சாலையை, ‘பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை’ என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். அதனடிப் படையில், 3-ம் தேதி நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெயர் மாற்றம் குறித்து விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பெயர் பலகையை நானே திறந்துவைப்பேன்’ என தெரிவித்திருந்தார்.
இதன்படி, பெயர் மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ‘பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை’ என பொறிக்கப்பட்ட பெயர் பலகையை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று திறந்துவைக்கிறார். முதல்வர் வருகையையொட்டி அடையாறு பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.