Published : 25 Apr 2020 08:57 PM
Last Updated : 25 Apr 2020 08:57 PM

தமிழக திருக்கோயில்களில் அன்னதானம் தொடர அனுமதிக்க வேண்டும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்

தமிழகத்தில் 47 திருக்கோயில்களிலிருந்து 10 கோடி ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப அறநிலை துறை ஆணையிட்டிருப்பது மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது, இந்த வகையில் அந்தப் பணம் பொதுவான நிவாரணங்களுக்கே செலவிடப்படும் என்பது ஏற்கத்தக்கதல்ல என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஊரடங்கு தொடங்கி கிட்டத்தட்ட இன்றோடு ஒரு மாத காலம் முடிவடையும் நிலையில் பசித்தவருக்கு அன்னமிடும் திருக்கோயில்களின் செயலை தமிழக அரசு முடக்கி வைத்திருப்பது வருத்தமளிக்கிறது, கவலையளிக்கிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் இஸ்லாமியப் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ரம்ஜான் கஞ்சிக்கான அரிசியை தமிழக அரசு வழங்கியது. அதே போல் கோவில்களில் அன்னதானம் தொடர, அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த இக்கட்டான சூழலில், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி அரிசி வழங்க வேண்டும்.

இது போதாதென்று தேர்ந்தெடுக்கப்பட்ட 47 திருக்கோயில்களிலிருந்து 10 கோடி ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப அறநிலை துறை ஆணையிட்டிருப்பது மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த வகையில் அந்தப் பணம் பொதுவான நிவாரணங்களுக்கே செலவிடப்படும் என்பது ஏற்கத்தக்கதல்ல. கோயில் வருமானம் என்பது கோயில் சார்ந்த பணியாளர்களுக்கு குடிமக்களுக்கு, பக்தர்களுக்கு போய் சேரவேண்டியது.

எனவே அந்தப் பணம் வருமானமின்றி முடங்கி கிடக்கும் பூசாரிகள், அர்ச்சகர்கள், பிரசாரகர்கள், ஓதுவார்கள், மங்கல இசைக் கலைஞர்கள் மற்றும் அக்கோயில் சார்ந்த பக்தர்கள், குடிமக்கள் ஆகியோரின் நிவாரணத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல அன்னதானம் தொடர வேண்டும். ஒரே இடத்தில் அன்னதானம் முடியாது எனில், நலிவுற்ற பக்தர்களின் வீட்டிற்கு உணவுப் பொட்டலம் அனுப்பப்பட வேண்டும்.

ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தானம் ஊரடங்கு நிலையிலும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்து வரும் செய்தியை நாம் கேள்விப்படுகிறோம். புதுவை மாநிலத்தில் கோயில்களில் அன்னதானங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்நிலை தொடர வேண்டும். அது மட்டுமல்லாது, ஊரடங்கை மனதிற் கொண்டு அன்னதான சேவை மேலும் விரிவுபடுத்தப் பட வேண்டும். கோயில் வருமானம், பொதுச் செலவினங்களில் சேர்க்கப்படாமல் பசி, பிணி போக்குவது போன்ற நற்காரியங்களுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும்.

எனவே தமிழக அரசின் அறநிலையைத் துறை, தனது ஆணையை திரும்பப் பெறுவதோடு, கோயில் சார்ந்த குடி, குடி சார்ந்த கோயில் என்பதற்கிணங்க, கோயில் சார்ந்த பக்தர்களின் பசி முதலான துயர் போக்கும் சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x