சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகத்தின் 2வது பெரிய சந்தையான மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் மூடல்: ஆட்சியரிடம் வியாபாரிகள் முறையீடு 

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காததால் தென்தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையான மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டை, தற்காலிகமாக செயல்படுவதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. அதிருப்தியடைந்த வியாபாரிகள், ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு அடுத்து மதுரையில் செயல்படும் மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் முக்கியமானது. ஒரு நாளைக்கு 25 லாரிகள், 50 மினி லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

இந்த மார்க்கெட்டில் 500-க்கும் மேற்பட்ட கடைகள், 1,000க்கும் மேற்பட்ட திறந்த வெளி கடைகள் செயல்படுகின்றன. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு காய்கறிகள், வெங்காயம் விற்பனைக்கு வருகின்றன. இந்த மார்க்கெட்டில்உள்ள கடைகளை மாநகராட்சி டெண்டர்விட்டு, அதற்கு வாடகை வசூல் செய்கிறது.

இந்நிலையில் மதுரையில் ‘கரோனா’ வேகமாக பரவும் நிலையில் இந்த மார்க்கெட்டில் வியாபாரிகள், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

அதனால், இந்த மார்க்கெட் செயல்படுவதற்கு மாநகராட்சி தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அதற்கு மாற்றாக இந்த மார்க்கெட் நகரில் வேறு 5 இடங்களில் பிரிந்து செயல்படுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சென்டரல் மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்டரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், ‘‘நாங்கள் மாநகராட்சிக்கு வாடகை கட்டிவிட்டு வியாபாரம் செய்கிறோம்.

ஒட்டுமொத்த தென் தமிழகத்திற்கும் எங்கள் மார்க்கெட்டில் இருந்துதான் காய்கறிகள் விற்பனைக்கு செல்கிறது. விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகளை லாரிகளில் தினமும் அனுப்பி வைக்கின்றனர். தற்காலிகமாக இந்த மார்க்கெட்டை மூடிவிட்டு வேறு 5 இடங்களுக்கு இடமாற்றம் செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. அதனால், ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம், ’’ என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

மாட்டுத்தாவணி மொத்த காய்கறி மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத காரணத்தினாலும், பொது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையிலும் தற்காலிகமாக நகர்வு செய்யப்பட்டு மாற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எம்.ஜி.ஆர். ரேஸ்கோர்ஸ் மைதானம், ஓத்தக்கடை விவசாயக் கல்லூரி மைதானம், நத்தம் மெயின் ரோடு, யாதவர் ஆண்கள் கல்லூரி மைதானம், மாட்டுத்தாவணி கனரக வாகனம் நிறுத்துமிடம்,

டி.பி.கே. ரோடு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மைதானம், ஆகிய 5 பகுதிகளுக்கு பிரிக்கப்பட்டு தற்காலிகமாக நேற்று முதல் செயல்பட உத்தரவிடப்பட்டது.

மேற்காணும் இடங்களில் இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை மொத்த காய்கறி கடைகள் செயல்படும். இந்த இடங்களில் பொருட்களை வாங்க வரும் வியாபாரிகள் சமூக இடைவெளியாக 1 மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை பெற ஏதுவாக கோடுகள் வரையப்பட்டு வருகிறது, ’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in