

கரோனா ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்படுவதாக அழகர்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் மண்டூக மகரிஷிக்கு மோட்டம் வழக்கும் நிகழ்வு இணையம் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவித்துள்ளது.
மதுரை சி்த்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரையில் மதுரை திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சித்திரைத் திருவிழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை விழா ரத்து செய்யப்படுவதாகவும், மே 4-ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்தது. 4 பட்டாச்சாரியர்கள் மட்டும் நடத்தும் திருமணம் இணையம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதற்கிடையில், கள்ளழகர் கோயில் சி்த்திரை விழா மே 3-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், மே 3 வரை ஊரடங்கு இருப்பதால் இவ்விழா நடத்தலாமா என கோயில் நிர்வாகம் அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.
இந்நிலையில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது: ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் சமூக இளைவெளி பின்பற்றுவது கட்டாயம். இந்த சூழலில் கள்ளகழகர் ஆற்றில் இறங்குவது, எதிர்சேவை உள்ளிட்ட முக்கிய விழா நிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் ரத்து செய்யப்படுகிறது.
எனினும், பக்தர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், பல்லாண்டு காலமாக நடைபெற்ற உலகப்புகழ்பெற்ற இத்திருவிழா இடைநில்லாமல் இருக்கும் பொருட்டும், திருக்கோயில் பட்டாச்சாரியாளர்கள் கருத்துருவின்படி வரும் மே 8-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும்.
இதை கோயில் பட்டாச்சாரியாளர்கள் மற்றும் பரிசாரகர்களால் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கோயில் உள்பிரகாரத்தில் நடைபெறும்.
இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. www.tnhrce.gov.in என்ற இணையதளத்திலும், youtube மற்றும் முகநூல் மூலமாகவும் மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் மே 8-ம் தேதி மாலை 4.30 மணிமுதல் 5 மணிவரை நேரடியாக ஒளிபரப்பப்படும். இவ்வாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.