

மின்கம்பிகளில் சிக்கும் பட்டங்களால் கோவையில் அடிக்கடை மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதனால் மின்வாரிய ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பட்டங்களைப் பறக்க விட வேண்டாம் என்று இளைஞர்களுக்கு மின்பகிர்மானக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாட்டில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ளது. மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை முதல்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை இரண்டாம் கட்ட ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியில் வரும் பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது, கேரம், சதுரங்கம், தாயம் போன்றவற்றில் பெரும்பாலானவர்கள் பொழுது போக்கி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பொது மின் நுகர்வோர்கள், கோவை மாவட்ட மின் விநியோகம் மற்றும் பகிர்மான கழக, மின்தடை புகார் நீக்கும் எண்ணில் தொடர்பு கொண்டும், அருகில் உள்ள செயற்பொறியாளர்கள் அலுவலகங்களையும் தொடர்புகொண்டு தொடர்ச்சியாக புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், மின்தடை ஏற்பட்டால் வீடுகளுக்குள் முடங்கியுள்ளவர்கள் சாலைகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.
தொழில் நகரமான கோவையில் ஏராளமான பெரு நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கான உள்மாநில மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊடரங்கு உத்தரவு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கும் நிலையில், மின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று மின் பகிர்மானக் கழக அலுவலர்கள் ஆய்வில் இறங்கினர். அப்போது பல்வேறு இடங்களில் மின் கம்பிகளில் பட்டம் சிக்கி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பது அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
கோவையில் மாலை நேரங்களில் பொழுதுபோக்குக்காக இளைஞர்கள் பலர் தங்கள் வீட்டு மாடியில் இருந்து பலவண்ணப் பட்டங்களைப் பறக்க விடுவதைப் பார்க்க முடிகிறது. குடியிருப்புகளுக்கு அருகில்தான் மின் கம்பிகளும், மின் கடத்திகளும் அமைந்துள்ளன. காற்று குறைவாக இருக்கும்போது தாழ்வாக பட்டம் பறக்கும்போது, மின் கம்பிகளில் சிக்கிக் கொள்கின்றன. அதை இளைஞர்கள், சிறுவர்கள் எடுக்க முயலும் மின் கம்பிகள், ஒயர்களின் இணைப்புத் துண்டிக்கப்படுகிறது. இதனால் மின்தடை ஏற்படுகிறது.
இதையடுத்து, மின் நுகர்வோர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று மின் இணைப்பை சரிசெய்யும் மின் ஊழியர்கள், நெருக்கமான குடியிருப்புகளுக்கு அருகில் மின் இணைப்புகளும் உள்ளதால் பட்டங்களைப் பறக்கவிட வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். பட்டங்களை திறந்தவெளியில் பறக்கவிடலாம் என்றும், தற்போது ஊடரங்கு அமலில் உள்ளதால், யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திச் செல்கின்றனர்.
இதுகுறித்து கோவை மாநகர மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கொ.குப்புராணி கூறும்போது, "கோவை மாநகரில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் வீட்டு மாடியில் இருந்து பட்டங்களைப் பறக்க விடுகின்றனர். அப்போது அறுந்து விழும் பட்டங்கள், காற்று குறைவாக இருப்பதாக இருக்கும்போது தாழ்வாகப் பறக்கும்போது மின் கம்பிகளில் சிக்கிக் கொள்வதால், மின் விநியோகம் தடைபடுகிறது.
மின்கம்பிகளில் சிக்கிய பட்டங்களை எடுக்க முயலும்போது மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், மின்தடை ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் பட்டங்கள் பறக்க விடுவதைத் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.