

கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 70 பேர் 70 யூனிட் ரத்தத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானம் செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கணிசமான எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அவ்வப்போது ரத்ததானம் செய்வது வழக்கம். இந்த நிலையில், கரோனா அச்சம் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் முந்தைய அளவுக்கு யாரும் இப்போது ரத்த தானம் செய்ய வருவதில்லை என்ற தகவலும், ரத்த வங்கியில் போதிய ரத்தமும் இருப்பில் இல்லை என்ற தகவலும் இந்த அணியினருக்குக் கிடைத்துள்ளது.
இதையடுத்து இரண்டு நாட்கள் முன்னதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவர்களிடம் பேசி, அதை மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரிவித்து அவர்களின் சிறப்பு அனுமதி பெற்று ரத்த தானம் செய்ய முடிவு செய்தனர். கரோனா நேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சென்று ரத்த தானம் அளிப்பது சரியாக இருக்காது என்பதால் ரத்த தானம் அளிப்பவர்களை கோவை கணபதியில் உள்ள சிஐடியு இன்ஜினீயரிங் சங்க அலுவலகக் கட்டிடத்திற்கு இன்று காலையில் வரவைத்து 70 பேரிடம் 70 யூனிட் ரத்தம் சேகரித்தது ரத்த வங்கிக் குழு.
இந்த ரத்த தான முகாமை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ஸ்டாலின் குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் சந்திரசேகர், ரத்த தான ஒருங்கினைப்பாளர் விவேகானந்தன் மற்றும் துரைசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் முகாமை ஒருங்கிணைத்தனர்.
இதுகுறித்து ரத்த தானம் அளித்த சங்க நிர்வாகிகளில் சிலர் கூறும்போது, ‘‘கரோனா நோய்த்தொற்று பரவும் இந்த நேரத்தில் அரசு மருத்துவமனையில் அவசரமான மற்றும் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், ஊரடங்கு என்பதால் கல்லூரிகள் இயங்கவில்லை, தன்னார்வலர்கள் வெளிவர இயலாத நிலை.
இதனால் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு ரத்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்துதான் உடனடியாக இந்த ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நேரத்திலும் இவ்வளவு பேர் கூடியது எங்களுக்கே வியப்புதான். காலத்தே செய்வது மட்டுமல்ல, கஷ்டமான சூழலிலும் செய்வதுதானே தானம் என்பதை இன்றைக்கு ரத்த தானம் செய்யவந்தவர்கள் உணர்த்திச் சென்றிருக்கிறார்கள்” என்றனர்.