Last Updated : 25 Apr, 2020 05:23 PM

 

Published : 25 Apr 2020 05:23 PM
Last Updated : 25 Apr 2020 05:23 PM

கேரள அரசு அமைக்கும் புற்றுநோய் துணை மையத்திற்கு நாகர்கோவிலில் இடம்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கோரிக்கை 

நாகர்கோவிலில் புற்றுநோய் மையம் அமைக்க கேரள அரசு முன்வந்துள்ளது. அதற்குத் தேவையான கட்டிடம் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 546 புற்று நோயாளிகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் பதிவு செய்து சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். எனவே, புற்றுநோயாளிகள் நீண்ட தூர பயணத்தை தவிர்க்க கேரள அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு புகுதியாக அந்த மாநிலம் முழுவதும் 20 துணை மையங்களை அமைக்க முடிவு செய்தது.

அதன்படி குமரி மாவட்டத்தில் அத்தகைய மையம் ஒன்றை அமைக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்று நாகர்கோயிலில் புற்றுநோய் துணை மையம் அமைக்க கேரள அரசு முன்வந்துள்ளது.

இதனை வரவேற்பதுடன் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கும் குமரி் மாவட்ட மக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு பிரிவு துவக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நீண்டகாலமாக முன்வைக்கப்படுகிறது.

ஆனால், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியில் இந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலை தற்போது கரோனா பாதிப்பை ஒட்டிய ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாமல் ஏழை எளிய புற்றுநோயாளிகள் மருந்து மாத்திரைகள்கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே, கேரள அரசு முன்வந்துள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தை நாகர்கோவிலில் அமைக்க கட்டடம் உள்ளிட்ட வசதிகளை செய்திடுமாறு தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x