விழுப்புரம் நகரில் முன்னறிவிப்பின்றி காய்கறிக் கடைகள் மூடல்: சூப்பர் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்; போலீஸார் திணறல்

விழுப்புரம் எம்.ஜி. சாலையில் குவிந்த மக்கள் கூட்டம்.
விழுப்புரம் எம்.ஜி. சாலையில் குவிந்த மக்கள் கூட்டம்.
Updated on
1 min read

விழுப்புரம் நகரில் முன்னறிவிப்பின்றி காய்கறிக் கடைகள் திடீரென மூடப்பட்டதால், சூப்பர் மார்க்கெட்டில் மக்கள் குவிந்தனர்.

விழுப்புரம் நகரில் கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாகவும் விழுப்புரம் எம்.ஜி. சாலையில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு கடந்த ஒரு மாதமாகச் செயல்பட்டு வருகிறது.

இதேபோல் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் நடைபாதைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டு அவர்கள் அங்கு வியாபாரம் செய்து வந்தனர். விழுப்புரம் உழவர் சந்தை மூடப்பட்டு காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வந்தது. இந்தக் கடைகள் அரசு விதிமுறைப்படி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கி வந்தது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று (ஏப்.25) விழுப்புரம் நகரில் உள்ள காய்கறிக் கடைகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டன. புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. அதேபோல் தற்காலிக உழவர் சந்தை விவசாயிகளும் பாதுகாப்பு கருதி இன்று காய்கறி விற்பனை செய்யவில்லை. இதனால் நகராட்சி பள்ளி மைதானம் பூட்டப்பட்டுக் கிடந்தது.

காய்கறிக் கடைகள் மூடப்படுவது பற்றி மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் செய்யவில்லை. இதனால் எம்.ஜி.சாலையில் காய்கறிகள் கிடைக்கும் என்றும், சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொள்ளலாம் என்றும் எம்.ஜி.சாலை மற்றும் நேருஜி சாலையில் பொதுமக்கள் கூடினர். பொதுமக்களைச் சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினார்கள்.

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, "வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் மட்டுமே காய்கறிக் கடைகளைத் திறப்பது என்றும் மற்ற 4 நாட்களில் கடைகள் இயங்காது எனவும் முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து கடந்த 4 நாட்களுக்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு முறையான தகவலைத் தெரிவித்துவிட்டோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in