

தமிழகத்தில் 1,100 காலிப் பணியிடங்களால் மருந்தாளுநர்களுக்கு பணிப்பளு அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3,000 மருந்தாளுநர் பணியிடங்கள் உள்ளன. தலைமை மருந்தாளுநர்கள், மருந்தாளுநர்கள், மருந்துக் கிடங்கு அலுவலர்கள் என மூன்று பிரிவுகளாக பணிபுரிகின்றனர்.
மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகரிக்கப்பட்டபோதிலும் 1985-க்கு பிறகு புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
தற்போது அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 700-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
கரோனா தொற்று நோய் பரவி வரும்நிலையில் மருந்தாளுநர்கள் புறநோயாளி, மருந்து வழங்குவதோடு, உள்நோயாளிகள் பிரிவு, கரோனா வார்டுகளுக்கு தேவையான மருந்துகளை பிரித்து அனுப்பும் பணியையும் மேற்கொள்கின்றனர்.
மேலும் தினமும் கிருமினி நாசினி தயாரித்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
இதுதவிர வீடுகளிலேயே முடங்கியுள்ள தொற்றா நோய் பிரிவு நோயாளிகளின் வீடுகளுக்கு துணை சுகாதார மையங்கள் மூலம் மருந்துகளை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பணிப்பளு அதிகரித்தபோதிலும் 1,100 பணியிடங்கள் காலியாக இருப்பதால் மருந்தாளுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மருந்தாளுநர்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்திலேயே 50 மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது அவசியம் கருதி மருத்துவர்கள், செவிலியங்கள் புதிதாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் மருந்தாளுநர்களை அரசு கண்டுகொள்ளவில்லை. பணிப்பளு அதிகரித்துள்ள இச்சமயத்திலாவது காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்று கூறினர்.