சின்ன சேலத்தில் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கை அகதிகள்

தண்ணீரின்றி தவிக்கும் இலங்கை அகதிகள்.
தண்ணீரின்றி தவிக்கும் இலங்கை அகதிகள்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் குடிநீர் பற்றாக்குறையால் இலங்கை அகதிகள் தவித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் இலங்கை அகதிகள் 75 குடும்பத்தினர், கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் அருகிலுள்ள நவீன அரிசி ஆலைகளில் பணிபுரிந்து வரும் சூழலில், தற்போது கரோனா வைரஸ் பரவல் தடுப்புக் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், குடியிருப்புகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்து வந்தாலும், அப்பகுதியில் தற்போது குடிநீர் பிரச்சினை எழுந்துள்ளது.

இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வாரத்திற்கு ஒருமுறை ஒரு வீட்டுக்கு 20 குடம் தண்ணீர் வழங்கப்படுகிறது. 75 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் வசிப்பவர்களுக்கு இந்தத் தண்ணீர் போதுமானதாக இல்லை.

முகாம் குடியிருப்போரின் தலைவராக விளங்கும் மோகன் என்பவர் இதுகுறித்துக் கூறுகையில், "குடிநீருக்காக அருகிலுள்ள விவசாய நிலங்களை நாடும் நிலை உள்ளது. போர் வீணாகிப் போனதால், 1,000 லிட்டர் தண்ணீர் ரூ.250க்கும் வாங்கிக் கூட்டாக அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்துகிறோம்.

தற்போது வருமானம் இல்லாததால், காசு கொடுத்து தண்ணீர் வாங்க முடியவில்லை. இப்போதே இந்த நெருக்கடி எழுந்துள்ள நிலையில், எஞ்சிய கோடைக் காலத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. தண்ணீர் பிரச்சினையோடு தினசரி உணவுக்கே குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்படுகிறோம். ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்குவதா? அல்லது குடிநீருக்காக அலைவதா எனத் தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் .

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in